புதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் அரசியல் சார்பற்றவராக இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையர்கள் மற்றும் தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்க இப்போது கடைபிடிக்கப்படும் நடைமுறையில் மாற்றம்செய்ய உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள், நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருதா போஸ், ரிஷிகேஷ் ராய் மற்றும் சி.டி.ரவிகுமார் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டியது கட்டாயம் என அரசியல் சாசனத்தின் 324 (2)-வது பிரிவு கூறுகிறது.

ஆனால் அரசியல் சாசனம் அமலுக்கு வந்து 70 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மத்தியில் ஆளும் ஆட்சியாளர்கள் தாங்கள் விரும்பும் நபரை இந்தப் பதவியில் அமர்த்துகிறார்கள். எனவே தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக சட்டம் இயற்றவேண்டும்.

டி.என்.சேஷன் உதாரணம்: டி.என்.சேஷன் தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகித்தபோது யாருடைய அழுத்தத்துக்கும் பணியாமல் தன்னிச்சையாக செயல்பட்டார். பல்வேறுசீர்திருத்தங்களை துணிச்சலாக மேற்கொண்டார். இதுபோன்றவர்களைத்தான் தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்க வேண்டும்.

தலைமை தேர்தல் ஆணையர் அரசியல் சார்பற்றவராகவும் யாருடைய அழுத்தத்துக்கும் அடிபணியாமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கும் வலிமை பெற்றவராகவும் இருக்க வேண்டியது அவசியம். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

அருண் கோயல் நியமன கோப்புகள்..: இந்த வழக்கு நேற்றும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், “மத்திய அரசின் செயலாளராக பதவி வகித்த அருண் கோயல் கடந்த 18-ம் தேதி விருப்ப ஓய்வு பெற்றார். அடுத்த நாளே அவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அவசர அவசரமாக அவரை இப்பதவிக்கு நியமித்தது குறித்து விசாரிக்க வேண்டும்” என்றார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், அருண் கோயல் நியமனம் தொடர்பான கோப்புகளை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான ஒரு வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என ஒரு வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டிடம் நேற்று கோரிக்கை வைத்தார்.

இதற்கு சந்திரசூட் கூறும்போது, “குற்ற விவகாரங்கள், நேரடி மற்றும் மறைமுக வரி, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் ஆகிய 4 விவகாரங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க அடுத்த வாரம் சிறப்பு அமர்வுகள் அமைக்கப்படும்” என்றார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *