கனிமொழி வகித்திருந்த தி.மு.க மகளிரணிச் செயலாளர் பதவி நாகர்கோவிலைச் சேர்ந்த முன்னாள் எம்.பி ஹெலன் டேவிட்சனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தி.மு.க பாரம்பர்யத்தைச் சேர்ந்த டேவிட்சனை 1995-ம் ஆண்டு திருமணம் செய்த கையோடு அந்தக் கட்சியில் உறுப்பினராக இணைந்தார் ஹெலன் டேவிட்சன். சுமார் 20 ஆண்டுகள் இளைஞரணி, வட்டப் பிரதிநிதி எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்த டேவிட்சன், இப்போது தி.மு.க-வில் தொடர்ந்து இயங்கிவருகிறார். ஹெலன் டேவிட்சன் தி.மு.க-வில் சிறு சிறு பொறுப்புகளை வகித்துவந்த நிலையில் 2004-ல் மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பதவி அவரைத் தேடிவந்தது.

2009-ல் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றார். 2014-ல் எம்.பி பதவிக்காலம் முடிவடைந்த பிறகு மகளிர் தொண்டரணி மாநிலச் செயலாளர் பதவி அவரைத் தேடிவந்தது. இப்போது மாநில மகளிரணிச் செயலாளர் பதவிக்கு வர கனிமொழி தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆனது மட்டும் காரணம் அல்ல. கனிமொழியுடனான ஹெலன் டேவிட்சனின் நெருங்கிய நட்பும் ஒரு காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

2ஜி வழக்கில் கனிமொழி கைதான நேரத்தில் அப்போது எம்.பி-யாக இருந்த ஹெலன் டேவிட்சனை அழைத்த துரைமுருகன், ‘நீங்கதான் கனிமொழியை கவனிச்சுக்கணும்’ என்று சொல்லியிருக்கிறார். கனிமொழி சிறையில் இருந்த ஏழு மாதங்களும் அவருக்கு உறுதுணையாக ஹெலன் டேவிட்சனும் இருந்தார். சிறையிலிருந்து கனிமொழி கோர்ட்டுக்கு ஆஜராக வரும்போது ஒவ்வொரு நாளும் காலை முதல் மாலை வரை அவருடன் இருந்திருக்கிறார் ஹெலன் டேவிட்சன்.

ஹெலன் டேவிட்சன், கணவர் டேவிட்சனுடன் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்தபோது

ஹெலன் டேவிட்சன், கணவர் டேவிட்சனுடன் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்தபோது

டெல்லியில் முகாமிட்டிருந்த ராசாத்தி அம்மாளிடம், கருணாநிதி பேசுவதற்காக ஹெலன் டேவிட்சனின் செல்போனில் அழைத்து, அதன் மூலமாகத்தான் பேசியிருக்கிறார். அப்போது ஹெலன் டேவிட்சனுக்கு கனிமொழியுடன் நெருக்கமான நட்பு ஏற்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டில் நடந்த தி.மு.க உட்கட்சித் தேர்தலில் மாவட்டச் செயலாளராக ஐந்து பெண்களை நியமிப்பதாகச் சொல்லப்பட்டது. அதற்காக ஹெலன் டேவிட்சனிடமும் வேட்புமனு தாக்கல் செய்ய தலைமை சொல்லியிருக்கிறது. பின்னர் அந்தத் திட்டம் கைவிடப்பட்டதால் மாநில மகளிர் தொண்டரணிச் செயலாளர் பதவி ஹெலன் டேவிட்சனுக்கு வழங்கப்பட்டது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: