சூரத்: குஜராத்தில் பாஜ சார்பில் போட்டியிட சீட் கிடைகாததால், கட்சிக்கு எதிராக குழிபறிக்கும் வேலையில் எம்எல்ஏக்கள் இறங்கி உள்ளனர். அதிருப்தி வேட்பாளராக போட்டியிட்ட 12 பேர் கட்சியில் இருந்து 6 ஆண்டுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் 1 மற்றும் 5ம் தேதிகளில் இரண்டு கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. தேர்தல் பிரசாரம் முடிவடைய இன்னும் ஒரு வாரமே உள்ளதால், பாஜ, காங்கிரஸ், ஆம் ஆத்மி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

குஜராத் பாஜவில் கோஷ்டி பூசல் உச்சகட்டம் அடைந்ததால், பாஜ சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கட்சி தலைமைக்கு பெரிய தலைவலி ஏற்பட்டுள்ளது. சிட்டிங் எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் வாய்ப்புக்காக காத்திருந்த பலருக்கு சீட் தராததால், அவர்கள் கட்சிக்கு எதிராக சுயேட்சையாக களமிறங்கி உள்ளனர். இதனால், பாஜவின் வாக்குகள் சிதறி அக்கட்சி வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால் சுயேட்சை  வேட்பாளர்களாக வேட்புமனு தாக்கல் செய்த 12 பாஜக அதிருப்தி நிர்வாகிகளை  அக்கட்சி தலைமை சஸ்பெண்ட் செய்துள்ளது. ஏற்கனவே 6 பாஜக அதிருப்தி  வேட்பாளர்களை அக்கட்சி தலைமை சஸ்பெண்ட் செய்தது. இதுகுறித்து மாநில தலைவர்  சி.ஆர்.பாட்டீல் வெளியிட்ட அறிக்கையில், ‘கட்சி விரோத நடவடிக்கையில்  ஈடுபட்ட 12 அதிருப்தி வேட்பாளர்கள் 6 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட்  செய்யப்படுகின்றனர்’ என்று கூறி உள்ளது.

குஜராத்தில் இந்த தேர்தலில் 42 எம்எல்ஏக்கள் மீண்டும் போட்டியிட வாய்ப்பு  மறுக்கப்பட்டது. அதனால், அந்த எம்எல்ஏக்களின் தூண்டுதலின் பேரில் பலர்  சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். இவர்கள் பெரும் வாக்குகள் பாஜகவுக்கு  தோல்வியை ஏற்படுத்தி விடும் என்பதால், தொடர்ந்து அடுத்தடுத்து அதிருப்தி  வேட்பாளர்களை பாஜக தலைமை சஸ்பெண்ட் செய்து வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், 5 முறை அல்லது அதற்கு மேல் வெற்றி பெற்ற 7 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாட்டை பிளவுப்படுத்தி அழித்தது காங்கிரஸ்-மோடி குற்றச்சாட்டு
வடக்கு குஜராத்தில் உள்ள மெஹ்சானாவில் நடந்த பேரணியில் பேசிய பிரதமர் மோடி, ‘காங்கிரஸ் மாதிரி என்றால் ஊழல், குடும்ப அரசியல், மதவெறி மற்றும் சாதிவெறி. வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதற்கும், அதிகாரத்தில் இருக்க மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவதற்கும் அவர்கள் பெயர் பெற்றவர்கள். இந்த மாதிரி குஜராத்தை மட்டுமல்ல, இந்தியாவையும் அழித்துவிட்டது. அதனால்தான் இன்று நாட்டை முன்னேற்றுவதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘குஜராத்தில்  வரவிருக்கும் தேர்தலில், குறிப்பாக இளைஞர்கள்  மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மத்தியில் சாதனைப் பதிவாக இருக்கும்’ என்று தெரிவித்தார்.

நான் உருவாக்கிய குஜராத் 34 லட்சம் பேர் பிரசாரம்
‘நான் உருவாக்கிய குஜராத்’ என்ற பிரதமர் நரேந்திர மோடியின் பிரச்சார முழக்கம், சமூக வலைதளங்களில் 34 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்று, தங்கள் செல்பி மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளதாக பாஜ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

‘சதாம் உசேன்’ போல் ராகுல்
அகமதாபாத்தில் நடந்த பேரணியில் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசுகையில், ‘காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் ஈராக் சர்வாதிகாரியான ‘சதாம் உசேன்’ போல் இருக்கிறார். சர்தார் படேல், ஜவஹர்லால் நேரு அல்லது மகாத்மா காந்தியைப் போல அவர் தோற்றத்தை மாற்றியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்’ என்று தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி, அசாம் முதல்வர் ஒரு ‘குட்டி பூதம்’ போல் ஒலிக்கிறார் என்று தெரிவித்தார்.

பழங்குடியினரை ஏன் ஆதரிக்கவில்லை
ஆளும் பாரதிய ஜனதா கட்சி பழங்குடியினரின் உரிமைகளை பறிப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு பதிலடியாக சூரத் மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மஹுவா கிராமத்தில் நடந்த பேரணியில் மோடி பேசுகையில்,பழங்குடியினர் மீது எதிர்க்கட்சிகளுக்கு  இவ்வளவு அக்கறை இருந்தால், குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்முவை  காங்கிரஸ் ஏன் ஆதரிக்கவில்லை’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *