புதுடில்லி: புதுடில்லியில் காதலி ஷ்ரத்தாவை கொலை செய்து, 35 துண்டுகளாக வெட்டி வீசிய அப்தாப், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, ‘துண்டு துண்டாக வெட்டி வீசிவிடுவேன்’ என மிரட்டியதாக, போலீசில் ஷ்ரத்தா புகார் அளித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த அப்தாப் அமீன் புனேவாலா, தன் காதலி ஷ்ரத்தாவுடன் புதுடில்லியில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தார். காதலியுடன் ஏற்பட்ட தகராறில், அவரை கொலை செய்து, உடலை 35 துண்டுகளாக்கி, அதை புதுடில்லியின் பல்வேறு இடங்களில் அப்தாப் வீசினார். இதையடுத்து அப்தாபை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், புதுடில்லிக்கு வருவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, மும்பையில் இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்ததும், அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது.

இது குறித்து போலீசார் கூறியதாவது: கடந்த 2020 நவ., 23ல் மும்பையில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு, தன் நண்பர் ஒருவருடன் வந்த ஷ்ரத்தா, எழுத்துப்பூர்வமாக அப்தாப் மீது புகார் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது: கடந்த ஆறு மாதங்களாகவே அப்தாப் என்னை அடித்தும், துன்புறுத்தியும் வருகிறார். இது, அவரது பெற்றோருக்கும் நன்றாக தெரியும். என்னை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி வீசப் போவதாக மிரட்டுகிறார். எனக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன. எனக்கு ஏதாவது நேரிட்டால், அதற்கு அவரே காரணம். இவ்வாறு அதில் அவர் எழுதியுள்ளார்.
சில நாட்கள் கழித்து போலீசாருக்கு எழுதிய மற்றொரு கடிதத்தில், ‘அப்தாபின் பெற்றோரிடம் பேசியுள்ளேன். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்’ என, ஷ்ரத்தா குறிப்பிட்டுள்ளார். போலீஸ் ஸ்டேஷனுக்கு உடன் சென்ற நண்பர் வாயிலாக தற்போது இந்த தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, அப்தாபின் பெற்றோரை அழைத்து விசாரணை நடத்த புதுடில்லி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement