சென்னை: காசிக்கும், தமிழகத்துக்கும் இடையிலான தொன்மையான நாகரிக பிணைப்பை மீட்டுருவாக்கம் செய்யும் நோக்கில், வாரணாசியில் ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி கடந்த 17-ம் தேதி தொடங்கி, டிசம்பர் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதன் ஒரு பகுதியாக, சென்னை ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் சார்பில், அறிஞர்கள் இடையே கல்விசார் பரிமாற்றங்கள், கருத்தரங்குகள், விவாதங்கள் நடைபெறுகின்றன.

இதில் பிரதிநிதிகள், இளைஞர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்கும் விதமாக, தமிழகத்தில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் காசிக்கு மொத்தம் 13 ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இதில் தமிழகத்தில் இருந்து 2,592 பேர் பயணம் செய்யஉள்ளனர். ஏற்கெனவே, தமிழகத்தின் வெவ்வேறு நகரங்களில் இருந்து வாரணாசிக்கு 2 ரயில்கள் இயக்கப்பட்டன. இவற்றில் தலா 215 பேர் சென்றனர்.

வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று இயக்கப்பட்ட ரயிலில்

215 தமிழக பிரதிநிதிகள் சென்றனர்.

இந்நிலையில், 3-வது ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து நேற்று காலை புறப்பட்டது. சென்னை சென்ட்ரல் – கயா வாராந்திர விரைவு ரயிலில் 3 ஏசி பெட்டிகள் பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. இந்த ரயிலில் 214 பிரதிநிதிகள் பயணம் மேற்கொண்டனர். இவர்கள் உத்தர பிரதேச மாநிலம் முகல்சராய் நகரில் இறங்கி, அங்கிருந்து காசிக்கு செல்கின்றனர்.

முன்னதாக, இவர்களுக்கு குடிநீர், பிஸ்கெட், பழங்கள் ஆகியவற்றை தமிழக பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி வழங்கினார். பாஜக ஆன்மிகப் பிரிவு மாநிலத் தலைவர் நாச்சியப்பன் மற்றும் நிர்வாகிகள் அவர்களை வழியனுப்பினர். அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ரயில்வே உயர் அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *