நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வாரிசு’ திரைப்படமும், அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘துணிவு’ திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. மிக நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் மோத இருப்பதால், இரு தரப்பு ரசிகர்களும் அதிக எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இதில் துணிவு படத்தை வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனமும், வாரிசு படத்தின் வெளியிடும் உரிமையை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனமும் கைப்பற்றி இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவில், அதிக செல்வாக்கு உள்ள உதயநிதி, துணிவு படத்திற்கு அதிக அளவு திரையரங்குகளை கைப்பற்றி விட்டதாக தகவல் வெளியானது. இதனை உதயநிதி ஸ்டாலின் மறுத்திருந்த போதும், அது குறித்தான சர்ச்சை இன்னும் ஓய்ந்த பாடில்லை. இதற்கிடையே வாரிசு படத்திற்கு தெலுங்கில் முன்னுரிமை கொடுக்கமுடியாது என்று தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டு இருந்ததும் தமிழ் சினிமாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தநிலையில் நடிகர் விஜயின் வாரிசு படம் தெலுங்கில் வெளியாவது குறித்தான பேச்சு வார்த்தை இரு தரப்புக்கும் இடையே நடந்ததாக தெரிகிறது. இந்த பேச்சு வார்த்தையில் சுமூகத்தீர்வு எட்டப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், தெலுங்கில் வாரிசு படம் வெளியாவதில் சிக்கல் இல்லை என தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.