மங்களூரு: மங்களூரில் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிக்கிய ஷாரிக், ஹிந்து பெயரில் மைசூரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். மேலும், ‘பிட் காயின்’ வாயிலாக தன் சகோதரி வங்கி கணக்கிற்கு பல லட்சம் ரூபாய் பரிமாற்றம் செய்துள்ளது, தெரியவந்துள்ளது.
தட்சிண கன்னடாவின், மங்களூரு பம்ப்வெல் பகுதியில் கடந்த 19ம் தேதி, ஷிவமொகா தீர்த்தஹள்ளியைச் சேர்ந்த ஷாரிக், 27, என்பவர் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு கொண்டு செல்லும்போது வெடித்தது. இதில் ஆட்டோ டிரைவர் புருஷோத்தம், 60, ஷாரிக் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. மங்களூரில், 2021ல் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக சுவரில் வாசகங்கள் எழுதிய வழக்கில் கைதாகி, ஜாமினில் விடுதலையானவர், தலைமறைவாகி விட்டார்.
‘பிட் காயின்’ கும்பல்
இவர், தன் பயங்கரவாத நடவடிக்கைக்கு எங்கும் ரொக்க பணத்தை கையாளவில்லை. ‘பிட் காயினை’ மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளார். இவருக்கு துபாய் போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து பிட் காயின் மூலமே பண பரிமாற்றம் நடந்துள்ளது.
தன் சகோதரியின் வங்கி கணக்குக்கு பல லட்சம் ரூபாய் அனுப்பி உள்ளார். இந்த பணம் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இது தொடர்பாக, அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடக்கிறது.

மங்களூரில் வெடிகுண்டை வெடிக்க செய்வதற்கான முன்னேற்பாடுகளை செய்ய, மைசூரை ஷாரிக் தேர்ந்தெடுத்துள்ளார். எனவே, கேரளாவில் இருந்தபடி ஓ.எல்.எக்ஸ்.,சில், மைசூரு லோகநாயகி நகரில் உள்ள மோகன் என்பவர் வீட்டை தேர்வு செய்துள்ளார்.
மோகனிடம், பிரேம்ராஜ் என்ற பெயரில், தார்வாட் விலாசம் உள்ள ஆதார் அட்டையை காட்டி உள்ளார். வாடகை வீட்டில் இருந்தபடியே, மைசூரின் கே.ஆர்.மொகல்லாவில் உள்ள மொபைல் போன் பழுது நீக்கும் பயிற்சி மையத்தில் சேர்ந்துள்ளார்.
அங்கும் போலி ஆதார் அட்டையை காட்டி, தன் பெயர் பிரேம்ராஜ் என கூறி உள்ளார். தன் மொபைல் போன் புகைப்படமாக, சிவன் உட்பட ஹிந்து கடவுள்களின் படங்களை வைத்துள்ளார். எந்த இடத்திலும் தன்னை முஸ்லிம் என்பதை காட்டி கொள்ளவில்லை. ஹிந்து போலவே நடந்து கொண்டுள்ளார்.
பயிற்சி மையத்தின் நிர்வாகி பிரசாத் கூறுகையில், “அவர் மொபைல் போன் பழுது பயிற்சிக்கும் சரியாக வருவதில்லை. அப்படியே வந்தாலும், வாசல் அருகில் சென்று அதிக நேரம் பார்ப்பார்.
”பயிற்சி என்ற பெயரில், 10 மொபைல் போன்கள் வாங்கினார். பல முறை போனில் தமிழில் பேசினார். தார்வாடை சேர்ந்த உனக்கு தமிழ் எப்படி தெரியும் என்றேன். அதற்கு, சில நாட்கள் தமிழகத்தில் இருந்தேன். அப்போது கற்று கொண்டேன் என சமாளித்தார்,” என்றார்.
குக்கர் குண்டு சக்தி
குக்கர் குண்டு வெடித்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்துள்ளனர். அதில், ‘குக்கர் வெடிகுண்டு சக்தி ஒரு பஸ்சையே சிதறடிக்கும் திறன் கொண்டது. 3 லிட்டர் குக்கரின் உள்ளே வெடிக்க வைக்கும் ‘ஜெல்’ போன்ற திரவம் இருந்தது.
இதோடு, ஒரு டெட்டனேட்டர், பிளஸ் மற்றும் மைனஸ் இணைப்பு ஒயர்கள் இருந்தன. பிளஸ், மைனஸ் இணைப்பு சரியாக கிடைக்கவில்லை.
‘இதனால் டெட்டனேட்டருக்கு பவர் கிடைக்காமல், ஜெல் மட்டும் தீப்பிடித்து எரிந்ததால் சிறிய அளவில் வெடி சம்பவம் நடந்துள்ளது. டெட்டனேட்டரும், ஜெல்லும் ஒரே நேரத்தில் வெடித்திருந்தால் நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு அசம்பாவிதம் நடந்திருக்கும்.
‘சரியாக வெடிக்க வைத்திருந்தால், ஆட்டோ சின்னாபின்னமாகி இருக்கும். சுற்றுப்புறத்தில் இருந்த வாகனங்களும் நொறுங்கி, உயிர் பலி அதிகமாகி இருக்கும்’ என, கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட தீர்த்தஹள்ளியைச் சேர்ந்த அப்துல் மதீன் என்பவரை, போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்