Loading

கடந்த 2017-ம் ஆண்டு விதார்த் நடிப்பில் வெளியான ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் இசையமைப்பாளர் எம்.ரகுராம், உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 38.

இரண்டு நாள்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ரகுராம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரகுராமின் இறப்பு குறித்து, ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் இயக்குநரான சுரேஷ் சங்கையாவிடம் பேசினேன்.

'ஒரு கிடாயின் கருணை மனு' பட டீம்

‘ஒரு கிடாயின் கருணை மனு’ பட டீம்

“அப்ப நான் குறும்படங்கள்ல ஒர்க் பண்ணிட்டிருந்தேன். என்னுடைய குருநாதரான ‘காக்கா முட்டை’ மணிகண்டன் மூலமாகத்தான் ரகுராம் அறிமுகமானார். அதன்பின் அவரும் நானும் அடிக்கடி பேசிக்குவோம். அவரோட சொந்த ஊர் தேனின்னு சொல்லியிருக்கார். இளையராஜா சாரோட குருநாதர்கிட்ட மியூசிக் கத்துக்கிட்டதா சொல்வார்.

அப்புறம், எனக்கு ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படம் பண்ற வாய்ப்பு அமைஞ்சது. அதோட தயாரிப்பாளர்கள் தரப்பில் வேற வேற இசையமைப்பாளர்களைச் சொன்னாங்க… ஆனா, எனக்கோ ரகுராமே இசையமைச்சா நல்லா இருக்கும்ன்னு தோணுச்சு. ஏன்னா, எங்க ரெண்டு பேருக்குமே ஒரே அலைவரிசை இருக்கும். இந்தப் பாடலை இவரைப் பாட வைத்தால் நல்லா இருக்குமேனு நான் ஒருத்தரை நினைப்பேன். ரகுராமும் அதையேதான் என்கிட்டே கேட்பார். நான் நினைச்ச இசையைக் கொடுத்திருக்கார். குரல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, சிம்பிளான ஒர்க்கிங் ஸ்டைல்தான் பின்பற்றுவார்.

சுரேஷ் சங்கையா

சுரேஷ் சங்கையா

என் படத்துக்கு இசையமைக்கிறதுக்கு முன்னாடியே அவர் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். அது மரபணு சார்ந்த பிரச்னை. அவரோட ஒவ்வொரு உடல் உறுப்புகளும் செயல் இழந்துட்டே இருந்தது. அவரும் அவ்வப்போது ட்ரீட்மென்ட் எடுப்பார். ஆனா, அப்படிப்பட்ட சூழலிலும் எனர்ஜியா உழைப்பார். அவரோட இசை, இந்தப் படத்துக்குப் பலமா வந்துச்சு. ஆனந்த விகடனில் வந்த படத்தின் விமர்சனத்தில் கூட, ‘ரகுராம் இசையில் பாடல்கள் மூன்றுமே சிறப்பு. மான் வேட்டைக்குச் சென்று போலீஸில் மாட்டியவனின் கதை சொல்வதாக, டைட்டில் கார்டில் ஒலிக்கும் ‘கொலசிந்து’ பாடல் தமிழ் சினிமாவுக்குப் புதுசு’ என்றெல்லாம் பாராட்டியிருந்தாங்க.

அடுத்து நான் பிரேம்ஜியை வச்சு, ‘சத்தியசோதனை’னு ஒரு படம் பண்ணி முடிச்சிட்டேன். அதற்கும் ரகுராம்தான் இசையமைச்சிருக்கார். அதிலும் நல்ல பாடல்கள் கொடுத்திருக்கார். அவரோட இழப்பு வேதனையா இருக்கு. ஒரு இசையமைப்பாளர் என்பதைத் தாண்டி ஒரு நல்ல நண்பரை இழந்திருக்கேன்” என்கிறார் சுரேஷ் சங்கையா.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *