புதுக்கோட்டை அருகே பெண் ஒருவர் மீது பொய் வழக்குப்பதிவு செய்ததாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்ணின் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கீரமங்கலம் காவல் நிலையத்தின் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த நீலகண்டன் மனைவி கோகிலா என்பவர் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து உயிரிழந்தார். இறப்பதற்கு முன்பு அவர் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்ததாகவும் அந்த கடிதத்தில் கடந்த 18ஆம் தேதி தனது வீட்டின் அருகே ஏற்பட்ட பாதை பிரச்னையில் போலீசார் தன் மீது பொய்யான வழக்குப்பதிவு செய்து மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதாகவும், அதேபோல் அருகே வசிக்கும் குமார் என்பவரும் அவரது மனைவி புவனேஸ்வரி என்பவரும் தன்னை கொலைவழக்கில் சிறையில் வைத்து விடுவேன் என மிரட்டியதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.

image

இதன் அடிப்படையில் பொய் வழக்கு புனைந்ததாகக் கூறப்படும் போலீசார், குமார் மற்றும் கீரமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றும் அவரது மனைவி புவனேஸ்வரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி அந்தப் பெண்ணின் உறவினர்கள் இன்று காலை மேற்பனைக்காடு கிராமத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் அவர்களது உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில் அந்த பெண்ணின் சடலம் உடற்கூறு பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

image

இந்நிலையில் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் அலட்சியம் காட்டுவதாக குற்றஞ்சாட்டியும் அந்தப் பெண் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளது போல் அவரின் தற்கொலைக்கு காரணமான அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைதுசெய்ய வேண்டும் என வலியுறுத்தி கீரமங்கலம் காவல் நிலையம் முன்பு திரண்ட அந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் பாஜக மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன் தலைமையிலான பாஜகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் போக்குவரத்தை மாற்றம் செய்தனர். இதைப் பார்த்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மற்றும் பாஜகவினர் ஆத்திரமடைந்து காவல் நிலையத்திற்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அவர்களை போலீசார் தடுக்க முயன்றதால் போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனிடையே பாஜக மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன் உள்ளிட்ட பத்திற்க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்திற்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களும் பாஜகவினரும் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டதோடு கோகிலாவின் தற்கொலைக்கு காரணமாக இருந்த நபர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

image

இதனை அடுத்து அங்கு காவல்துறை ஏஎஸ்பி ரமேஷ் கண்ணன் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதோடு சமரச பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையின் முடிவில் உயிரிழந்த கோகிலாவின் கணவர் நீலகண்டன் அளித்த புகாரின் அடிப்படையில் கீரமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயக்குமார், காவலர் கிரேசி மற்றும் கீரமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றும் கோகிலாவின் பக்கத்து வீட்டுக்காரரான புவனேஸ்வரி, அவரது கணவர் குமார் மற்றும் கீரமங்கலத்தைச் சேர்ந்த காமராசு, நெய்வத்தெளி கிராமத்தைச் சேர்ந்த  துரைமாணிக்கம் ஆகிய ஆறு பேரின் பெயர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் இந்த வழக்கில் சேர்ப்பதாக போலீசார் வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் அவரது உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்தப் போராட்டத்தால் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் 4 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

image

இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே கூறுகையில் இந்த சம்பவம் தொடர்பாக உடற்கூறு ஆய்வு அறிக்கை மற்றும் ஆர்டிஓ விசாரணைக்கு பின்பு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை விசாரணை செய்து எடுக்கப்படும் என்றும் கோகிலா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதப்பட்டதாக கூறப்படும் கடிதம் குறித்தும் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே: ஸ்ரீரங்கத்தில் கடத்தப்பட்ட குழந்தை சமயபுரத்தில் மீட்பு – சிசிடிவியில் சிக்கிய பெண் யார்?

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *