பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், `பழங்குடி இருளர்களுக்கான மனித உரிமைகள் மாநாடு’ இன்று விழுப்புரத்தில் நடைபெற்றது. சுமார் ஏழு கோரிக்கைகள் இந்த மாநாட்டில் முன்வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், “ஆதிதிராவிடர்/ பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் – 2016 சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் இந்த மாநாட்டின் முதல் கோரிக்கை. இந்த முக்கியமான கோரிக்கையை வைத்தே ஒரு நாள் பேசலாம். சட்டம் இருக்கிறது, ஆனால்… நடைமுறையில் இல்லை, பாதுகாப்பில்லை, வன்முறைகள் தடுக்கப்படவில்லை, மக்களுக்கு உரிய பலன் கிடைக்கவில்லை. இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ளதுதான். இந்நிலையில், இப்படியான ஒரு சட்டம் இயற்றப்பட்டதே பெரும் சாதனை. சாதியவாதிகள், மதவாதிகள் ஆதிக்கம் செலுத்தக்கூடிய அரசியல் தளத்தில்… பழங்குடி மற்றும் தலித் மக்களுக்காக ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்துவதும், அதை நடைமுறைப்படுத்துவதும் சாதனைதான்.

திருமாவளவன்

தலித் மற்றும் பழங்குடி மக்கள் இருவருமே பழங்குடிகள்தான். சமவெளி மற்றும் மலைப்பகுதி பழங்குடிகள் இருவரையும் ஆதிக்குடிகள் என்றுதான் அழைக்க வேண்டும். இந்த பழங்குடியினரும், தலித் எனும் பழங்குடியினரும் இந்த மண்ணின் பூர்வீக குடிகள், இந்த மண்ணுக்கு சொந்தக்காரர்கள். குறுகிப்போன சமூகத்தினர் தான் ‘குறவர்கள்’. இன்னும் இருட்டிலேயே கிடப்பதால் தான் ‘இருளர்கள்’ என்று பெயர். பழங்குடிகள் என்றால், ‘புதுக்குடிகள் அல்ல’ என்று பொருள்.

புதுக்குடிகள் என்றால்… கலப்பு கலாசாரம், கலப்பு வாழ்க்கை முறை, கலப்பு மொழி என்கின்ற பரிமாணத்தை பெற்றவர்கள். நாம் பின்பற்றும் கலாசாரம், அவர்களிடம் இல்லாததால்தான் அவர்களுக்கு ‘பழங்குடிகள்’ என பெயரில்லை. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் நம் வாழ்க்கை எப்படி இருந்ததோ… அப்படியே இப்போதும் இருப்பதால் நமக்கு ‘பழங்குடிகள்’ என்று பெயர். தலித்களுக்கு சாதியின் பெயரால் தீண்டாமை வன்கொடுமை இருக்கிறது. பழங்குடிகளுக்கு தீண்டாமை இல்லை. ஏனெனில், பழங்குடி மக்களோடு சாதி இந்துக்களின் குடிகள் கிடையாது. இப்படியான சூழலில்தான் எஸ்.சி/ எஸ்.டி-களுக்காக அகில இந்திய அளவிலே இளையபெருமான் ஆணையம் அமைக்கப்பட்டது.

பழங்குடி சமூக மக்கள், விசிக தொண்டர்கள்

நாம் இந்த மண்ணின் மைந்தர்களாக இருந்தும்… பொருளாதாரம், கல்வி மேம்படவில்லை. அடிப்படை வசதிகள் இல்லை, சராசரி மனிதன் பெறுகின்ற பாதுகாப்பை கூட பெற முடியவில்லை. காவல்துறை நினைத்தால் இம்மக்களை வேட்டையாட முடியும். சாதி இந்துக்கள் நினைத்தால் இவர்களின் சமூகத்தின் மீது தாக்குதல் நடத்த முடியும், பெண்களின் மீது பாலியல் வன்கொடுமையை ஏவமுடியும் எனும் பாதுகாப்பற்ற சூழல் இருக்கிறது. இதனை கண்டறிந்து அரசாங்கத்தின் கவனத்திற்கு அறிக்கையாக சேர்த்த கமிஷன் தான், இளையபெருமான் கமிஷன். அதன் அறிக்கையை வைத்துதான் 1989ல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உருவானது. பின் சிலசில திருத்தம் செய்து, 2016-ல் திருத்தப்பட்ட சட்டம் தான் தற்போது நடைமுறையில் உள்ளது.

சட்டங்களை யார் நடைமுறைப்படுத்த வேண்டும்? ஒன்று, அதிகார வர்க்கத்தை சார்ந்தவர்கள். இரண்டாவது சட்டமியற்றும் ஆட்சியாளர்கள். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, ஆளுநர் போன்றோர் இணைந்து சட்டத்தை இயற்றினாலும்… போலீஸ், வருவாய், நீதித்துறை ஆகியோர்தான் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால் சாதித்திமிர் ஒவ்வொரு காக்கிச்சட்டை மற்றும் வெள்ளை சட்டைக்குள்ளும் உண்டு. இதற்குப் பெயர்தான் சனாதானம். ‘இவர் கீழானவர், அவர் மேலானவர்’ என நினைக்கும் உளவியல் இருக்கிறதே அதற்கு பெயர்தான் சனாதனம்.

பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கல்யாணி, திருமாவளவன்

இந்த மாநாடு… அடிப்படையில் சனாதன எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு, பி.ஜே.பி எதிர்ப்பு மோடி எதிர்ப்பு மாநாடு. ஏனெனில், மோடி தான் சனாதானத்தின் பாதுகாப்பு அரண். வாட்ச்மேன் வேலை செய்வதுதான் மோடியின் வேலை. மோடி பகல் காவலர் என்றால், அமித் ஷா இரவு காவலர். பார்ப்பன சமூகத்தில் எடுபிடிகள் இவர்கள். மோடி வகிக்கும் பதவியின் பெயர்தான் ‘பிரதமர்’. ஆனால், நம்மை பாதுகாக்கிறார்களா..? பார்ப்பனிய சமூகத்தினர் ஒரு ஊரில் ஓரிரு குடும்பம் இருக்கும். அவர்களுக்கு பாதிப்பு யாராலும் வராது. அதேசமயம் இருளர் குடிகள் பெரும்பான்மையாக இருந்தாலும், போலீஸ் எப்போது வேண்டுமானாலும் அங்கு உள்ளே நுழைவார்கள், பெண்களை இழிவாக பேசுவார்கள். பழங்குடிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை தான் இந்த சமூகத்தில் உள்ளது.

பாஜக – அமித் ஷா, மோடி

பழங்குடியினர் தமிழகத்தில் ஒரு சதவீதம் மட்டுமே என்பதால் தான் அரசியல் கட்சிகள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. எனவே நாம் ஒருங்கிணைந்து அரசியல் சக்திகளாக திரள வேண்டும் என்றார்” ஆவேசமாக.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *