பெரம்பூர்: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ1.75 கோடியை போலீசார் பறிமுதல் செய்தனர். வட மாநிலங்களில் இருந்து சென்னைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதை தடுக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இவ்வாறு கடத்தலில் ஈடுபடுபவர்கள், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிகப்படியான கெடுபிடிகள் இருப்பதால் அதற்கு முந்தைய ரயில் நிலையமான பெரம்பூர் ரயில் நிலையத்தில் கஞ்சா பொருட்களை இறக்கி, அதனை பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதாக அவ்வப்போது போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைக்கிறது.

அதன்பேரில், கடந்த சில மாதங்களாக பெரம்பூர் பின்புறம் உள்ள ஜமாலயா பகுதியில் கஞ்சாவுடன் வட மாநிலத்தவர்கள் சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் வடமாநிலத்தில் இருந்து சென்னை வரும் ரயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் மஞ்சுளாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், நேற்று காலை இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது தனிப்படையினர் பெரம்பூர் ரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது காச்சிகோடா விரைவு ரயிலில் இருந்து இறங்கிய 2 நபர்கள், 2 பெரிய பையை எடுத்து சென்றனர். போலீசார் அவர்களை நிற்க சொன்னபோது நிற்காமல் ஓட ஆரம்பித்தனர்.

அவர்களை துரத்தி பிடித்து, அவர்கள் வைத்திருந்த பையில் கஞ்சா இருக்கும் என நினைத்து திறந்து பார்த்தபோது, கட்டுக் கட்டாக ரூ1.75 கோடி இருப்பது தெரிந்தது. இதனையடுத்து, மதுவிலக்கு போலீசார், அவர்களை செம்பியம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியைச் சேர்ந்த அபிஷேக் (22). அதே பகுதியை சேர்ந்த சூரஜ் (22) என்பதும், இவர்கள் ஆந்திர மாநிலம் கர்ணூல் பகுதியில் நகை வியாபாரம்  செய்து வருவதாகவும், சவுகார்பேட்டையில் நகை வாங்குவதற்காக வந்ததாகவும் தெரிவித்தனர்.

சவுகார்பேட்டையில் நகை வாங்க வருபவர்கள் ஏன் பெரம்பூர் ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறங்கலாமே என போலீசார் கேட்டதற்கு அவர்களிடத்தில் உரிய பதில் இல்லாததால், செம்பியம் போலீசார் இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் செம்பியம் காவல்  நிலையத்திற்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், ரூ1.75 கோடியை பறிமுதல் செய்து, 2 பேரையும், வருமானவரித்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விசாரணை முடிவில் இந்த பணம் யாருடையது, ஹவாலா பணமா என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล