பள்ளிகொண்டா: பள்ளிகொண்டா அருகே தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் காரிலிருந்து பணக்கட்டு பண்டல்களை லாரிக்கு மாற்றிய 4 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடமிருந்து ரூ.14.7 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அதனை உரிய ஆவணங்களின்றி சென்னையிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்கு எடுத்து செல்ல முயன்றது தெரிய வந்தது. வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் காவலர் பிரேம் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, பள்ளிகொண்டா அடுத்த சின்னகோவிந்தம்பாடி தேசிய நெடுஞ்சாலையோரம் சந்தேகத்திற்கு இடமாக 4 பேர் கொண்ட கும்பல், காரிலிருந்து சாலையோரம் நின்றிருந்த லாரி ஒன்றில் பிளாஸ்டிக் பண்டல்களை ஏற்றிக் கொண்டிருந்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களிடம் சென்று விசாரித்தனர். அப்போது காரில் இருந்த பண கட்டுகளை பார்த்த போலீசார் விசாரித்தனர். உடனே அவர்கள், கேரளாவில் லாரி வாங்க செல்கிறோம் என்று பதில் அளித்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரித்ததில், முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் பலத்த சந்தேகமடைந்த போலீசார் லாரியில் ஏறி சோதனையிட்டனர்.

அப்போது லாரி கேபின் மேல் பிளாஸ்டிக்கவரில் சுற்றப்பட்ட 30 பண்டல்கள் இருந்துள்ளது.  அந்த பண்டல்களை பிரித்து பார்த்தபோது அனைத்தும் ரூ.2000, ரூ.500 ரூபாய் கட்டுகள் இருப்பதை பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அவை ஹவாலா பணம் என்று தெரிகிறது. இதனை தொடர்ந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் எஸ்பி ராஜேஷ் கண்ணன் சம்பவ இடத்திற்கு வந்தார்.  தொடர்ந்து லாரி கேபின் மேல் இருந்த 30 பண்டல்கள் மற்றும் காரில் இருந்த 18 பண்டல்கள் என்று மொத்தம் 48 பண்டல்கள் ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து கார் மற்றும் லாரியை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரையும் பள்ளிகொண்டா காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் சென்னை பிராட்வே, சாலை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த நிசார் அகமது(33), மதுரை அங்காடிமங்கலம் பள்ளி வாசல் தெருவை சேர்ந்த வாசிம் அக்ரம்(19) ஆகிய 2 பேரும் உறவினர்கள் என்பதும், காரிலிருந்து பணத்தை மாற்றி கேரளாவிற்கு எடுத்து செல்ல வந்த லாரி டிரைவர் மற்றும் கிளீனர் கேரள மாநிலம் கோழிக்கோடு, வல்லக்காடு மலையை சேர்ந்த நாசர்(42), அதே பகுதியில் கியோகோத், பாரா தொடிகை ஹவுஸ் பகுதியை சேர்ந்த சர்புதின்(37) என்பதும் தெரிய வந்தது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், நிசார் அகமது சென்னை பிராட்வேயிலிருந்து காரில் கோவை வரை பணம் பண்டல்களை கொண்டு போய் சேர்த்தால் ரூ.50,000 தருவதன் பேரில் டீல் பேசி ஒப்புக்கொண்டு, பண பண்டல்களை காரில் எடுத்து வந்ததாகவும், தொடர்ந்து அங்கிருந்து மற்றொரு வாகனம் மூலம் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதிக்கு எடுத்து செல்ல திட்டம் தீட்டப்பட்டிருந்ததும், ஒரே வாகனத்தில் சென்றால் சிக்கல் வரும் என்று பள்ளிகொண்டா சுங்கசாவடி தாண்டியதும் ஒரு பாயிண்டிலும், அதற்கு அடுத்தபடியாக கோவையில் ஓரிடத்திலும் வாகனத்தை மாற்றம் செய்ய திட்டம் தீட்டியது தெரியவந்தது.

அப்போது முதல் திட்டத்தின்படி பள்ளிகொண்டா சுங்கசாவடி தாண்டியதும் 3 கிலோ மீட்டர் தொலைவில் காரை நிறுத்தி அங்கு தயார் நிலையில் இருந்த லாரியில் 30க்கும் மேற்பட்ட பண்டல்களை ஏற்றியுள்ளனர். மீதமுள்ள பண்டல்களை ஏற்றும்போது போலீசார் சுற்றி வளைத்தது விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து 4 பேரையும் பள்ளிகொண்டா காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். பணம் பண்டல்களை தனி அறையில் வைத்து பூட்டினர்.
இதையடுத்து  எஸ்பி ராஜேஷ் கண்ணன், ஏடிஎஸ்பி பாஸ்கரன், டிஎஸ்பி திருநாவுக்கரசு ஆகியோர் வந்து பண கடத்தலில் ஈடுபட்டவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணையில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து வந்த வருமான வரித்துறையினர் மற்றும் சென்னை வருமான வரித்துறை துணை இயக்குனர் ராஜமனோகரன் ஆகியோர் எஸ்பி முன்னிலையில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதற்காக கொண்டு வரப்பட்ட மெஷின்களில் பணம் எண்ணும் பணி காலை 10.45 மணிக்கு தொடங்கியது. இந்த பணம் எண்ணும் நிகழ்வை வீடியோ மூலம் போலீசார் பதிவு செய்தனர். தொடர்ந்து 6 மணி நேரத்திற்கும் மேலாக  நடைபெற்ற இந்த பணம் எண்ணும் பணி முடிவில் ஒரு பண்டலில் 30 லட்சம் வீதம், மொத்தம் 48 பண்டல்களில் ரூ.14கோடியே 70 லட்சத்து 85ஆயிரத்து 400 இருந்ததாக வருமான வரித்துறையினர் மற்றும் போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

தொடர்ந்து பணம் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் மீது பள்ளிகொண்டா போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். சென்னையிலிருந்து வேலூர் மாவட்டம் வழியாக கேரள மாநிலத்திற்கு ரூ.14.7 கோடி பணம் எதற்காக கடத்தப்பட்டது. மேலும், எத்தனை பேர் இந்த கடத்தலில் தொடர்பில் உள்ளார்கள். கார், லாரி யாருடையது. சட்டவிரோதமான செயலுக்கு பயன்படுத்த திட்டமிட்டு இந்த ஹவாலா பணம் கடத்தப்பட்டதா? 4 பேரின் செல்போன் உரையாடல்கள் குறித்தும் போலீசார் அடுத்த கட்ட விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் ஒரே நேரத்தில் பெரும் தொகையை கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்பி பேட்டி பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து வேலூர் மாவட்ட எஸ்பி ராஜேஷ்கண்ணன் நேற்றிரவு நிருபர்களிடம் கூறியதாவது: பணம் எதற்காக, எங்கிருந்து எடுத்து செல்லப்பட்டது என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம். தடைசெய்யப்பட்ட பிஎப்ஐ போன்ற அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா? என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவில்லை.  இவர்கள் 4 பேர் மீதும் வேறு ஏதேனும் வழக்கு உள்ளதா? என்றும் விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

* போலீஸ் விசாரணையில் வாய் திறக்கவில்லை
பள்ளிகொண்டாவில் ைகது செய்யப்பட்ட 4 பேரையும், மத்திய குற்றப்புலனாய்வு போலீசார் தனி அறையில் வைத்து, ஒருவர் பின் ஒருவராக தனித்தனியே விசாரணை நடத்தினர். ஆனால், அவர்கள் பணம் யாரிடமிருந்து வாங்கிச்ெசன்று யாரிடம் வழங்க இருந்தார்கள் என்று வாய்திறக்கவில்லையாம். பணத்தை கடத்திச்சென்று கொடுத்தால் ரூ.50ஆயிரம் கொடுப்பதாக கூறினர் என்று சொன்னதையே திரும்ப, திரும்ப சொல்லியதாக போலீசார் தெரிவித்தனர்.

* பணத்தை எண்ணி முடிக்க 6 மணி நேரம் ஆனது
பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மெஷின்களை கொண்டு எண்ணுவதற்காக காவல் நிலைய கதவினை தாழ்பாள் இட்டு அடைத்தனர். மேலும், சுற்றியிருந்த ஜன்னல் கதவுகளும் அடைக்கப்பட்டன. பின்னர் பள்ளிகொண்டா சுங்கசாவடியிலிருந்து 2 மெஷின்களும், நகை கடைகளில் இருந்து 4 மெஷின்கள், வங்கிகளிலிருந்து 2 மெஷின்கள் என்று மொத்தம் 8 மெஷின்கள் கொண்டு வரப்பட்டன. அப்போது இடையிடையே பணம் எண்ணும் மெஷினில் கோளாறு ஏற்பட்டதால் பணம் எண்ணும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்த பணம் எண்ணும் பணி சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக நடந்தது. இறுதியில் மொத்தம் ரூ.14 கோடியே 77 லட்சத்து 85ஆயிரத்து 400 இருப்பது தெரியவந்தது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล