Loading

மும்பை: ஐசிசி டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 16ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க உள்ள இந்திய அணி வரும் 6ம் தேதி ஆஸ்திரேலியா புறப்பட உள்ளது. இந்நிலையில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா முதுகு பகுதியில் காயத்தால் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி.20 தொடரில் இருந்து விலகிய நிலையில் உலக கோப்பை தொடரில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது அவர் உடற்தகுதி சோதனைக்காக பெங்களூரூ தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ளார். பும்ரா உலக கோப்பை தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்படவில்லை. இந்நிலையில் அவரின் காயத்திற்கு அறுவை சிகிச்சை தேவையில்லை. அவர் இந்திய அணியுடன் ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுவார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

அவர் உலக கோப்பையில் ஆடுவது பற்றி அக்டோபர் 15ம் தேதிக்குள் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், முதுகு காயத்தில் இருந்து குணமாக பும்ராவுக்கு ஓய்வு தேவை. இப்போதைக்கு, அவர் தேசிய அகாடமியில் மருத்துவ ஊழியர்களுடன் தொடர்பில் இருப்பார். மருத்துவர் நிதின் அவர் குணமடைவதை நேரடியாக கவனித்து வருகிறார். உலகக் கோப்பையில் இருந்து பும்ராவை முழுமையாக வெளியேற்றவில்லை. அவர் அணியுடன் ஆஸ்திரேலியா செல்வார். அங்கு அவர் குணமடைவதை பொறுத்து முடிவு செய்யப்படும். அணியில் மாற்றங்களைச் செய்ய எங்களுக்கு அக்டோபர் 15 வரை அவகாசம் உள்ளது. சிராஜ், ஷமி மற்றும் தீபக் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக அணியுடன் பயணிப்பார்கள். தொடருக்கு முன் பும்ரா சிறப்பாக இருந்தால், அவர் அணியில் நீடிப்பார். இல்லையெனில் ரிசர்வ் வீரர்களில் இருந்து ஒருவரை தேர்வு செய்வோம். இப்போதைக்கு, பும்ராவுக்கு காயம் உள்ளது. ஆனால் விலக்கப்படவில்லை, என்றார். இதனிடையே பும்ராவுக்கான காயம் குறித்து மருத்துவர்கள் கூறுகையில், ஸ்கேன் செய்து பார்த்ததில் பும்ராவுக்கு எந்தவித முறிவும் ஏற்படவில்லை என முடிவுகள் வந்துள்ளன.

அவருக்கு ஏற்பட்டுள்ள முதுகுவலி 4 வாரங்களுக்குள் சரியாகிவிடும். இந்த காயத்திற்கு அறுவை சிகிச்சை எல்லாம் தேவைப்படாது. இது மாதிரியான காயங்களுடன் சிலர் வலிநிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொண்டு விளையாடி இருக்கின்றனர். அந்த வகையில் டி20 உலக கோப்பையில் பும்ரா நிச்சயம் விளையாட வேண்டும் என இந்திய அணி நிர்வாகம் விரும்பினால் வலி நிவாரணிகளை எடுத்துக்கொண்டு அவரை விளையாட வைக்கலாம், என தெரிவித்துள்ளனர். பும்ரா குணமடைந்தால், உலக கோப்பையில் முக்கியமான சில போட்டிகளில் அவர் களம் இறங்குவார் என கூறப்படுகிறது. பிசிசிஐ தலைவர் கங்குலி அளித்துள்ள பேட்டியில், பும்ரா இன்னும் உலகக் கோப்பையில் இருந்து வெளியேறவில்லை. அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் இறுதி முடிவு எடுக்கப்படலாம் என தெரிவித்துள்ளார். இதனிடையே டி.20 உலக கோப்பை தொடருக்கான வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சிராஜ், உம்ரான் மாலிக் ஆகியோரும் ஆஸ்திரேலியா செல்ல அழைக்கப்பட்டுள்ளனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *