Loading

காஞ்சிபுரம்: லாரி டிரைவரிடம் செல்போன் பறித்து தப்பியபோது திருடர்கள் தவறவிட்ட செல்போன் மூலம் பாலாற்றில் பதுங்கியிருந்த திருடர்கள் மூவரை போலீசார் சுற்றிவளைத்து தூக்கினர். சினிமா பட காட்சி போல் அரங்கேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் அடுத்த வெள்ளகேட் பகுதியில் இருந்து எம்.சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு லாரி கிளம்பியது. சென்னை- பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலையில் வாகனம் வந்தபோது பழுதாகி நின்றுவிட்டது. இதனால் லாரி டிரைவர் ஜானகிராமன், லாரியின் பழுதை சரிசெய்வதற்கான முயற்சியை மேற்கொண்டார். அப்போது பைக்கில் வந்த  3  பேர், ஜானகிராமனிடம் என்ன பிரச்னை என்று பேச்சுகொடுத்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது ஒருவன் திடீரென தான் வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்து டிரைவர் ஜானகிராமனை மிரட்டி அவரிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன், 2500 ரூபாயை பறித்துக்கொண்டு அங்கிருந்து ஒரே பைக்கில் மூன்று பேரும் தப்பிச்செல்ல முயன்றனர். அப்போது பைக்கின் பின்னாடி அமர்ந்திருந்த இளைஞரை ஜானகிராமன் பிடித்து இழுத்தபோது அவரின் செல்போன் கீழே விழுந்துவிட்டது. ஆனால் செல்போன் விழுந்ததை கவனிக்காமல் பைக்கில் மூவரும் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.

இதுபற்றி ஜானகிராமன் கொடுத்த தகவல்படி, காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பேஸில் பிரேம்ஆனந்த், எஸ்ஐ துளசி ஆகியோர் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மர்ம நபர் தவறவிட்ட செல்போனை கைப்பற்றி அதன் மூலம் மர்ம நபர்களின் செல்போனை ட்ராக் செய்தனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் பள்ளூர் பகுதியில் உள்ள பாலாற்று பகுதியில் மறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்தனர். போலீசாரை கண்டதும் 3 இளைஞர்களும் ஆற்றில் குதித்து தப்ப முயன்றனர்.

ஆனாலும் போலீசார் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச்சென்று அந்த 3 பேரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர். விசாரணையில் பிடிபட்டவர்கள் படுநெல்லி பகுதியை சேர்ந்த கார்த்திக் (28), காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வசித்துவரும் மணிகண்டன் (24), அர்ஜுனா (25) என்பது தெரிந்தது. இவர்கள் மீது 10க்கும் மேற்பட்ட வழிப்பறி வழக்குகள் உள்ளது. இதையடுத்து வழிப்பறிக்கு பயன்படுத்திய உயர் தர பைக் மற்றும் ஜானகிராமனின் செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *