Loading

இந்தியப் பெண்கள் கிரிக்கெட்டின் அனுபவமிக்க வீராங்கனையான ஜூலன் கோஸ்வாமியின் சர்வதேச கிரிக்கெட் கரியர் முடிவுக்கு வந்திருக்கிறது. லார்ட்ஸில் நேற்று இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியே ஜூலன் கோஸ்வாமியின் கடைசிப் போட்டி.

வேகப்பந்து வீச்சாளராக 20 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து கிரிக்கெட் ஆடுவதென்பது எளிதான காரியமே இல்லை. அதை ஜூலன் செய்து முடித்திருக்கிறார். ஒரு மலைப்புமிக்க நெடும்பயணத்தை நிறைவு செய்திருக்கிறார்.

இந்திய பெண்கள் கிரிக்கெட்டில் ஜூலன் கோஸ்வாமியின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர, ஜூலன் கோஸ்வாமியை தவிர்த்துவிட்டும் சில விஷயங்களை பற்றி பேசியாக வேண்டும். இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி நேற்று லார்ட்ஸில் ஆடிய போட்டியில் ஒரு விவாதமிக்க சம்பவம் நடந்திருந்தது. சேஸிங் செய்த இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழக்க போட்டி ஒரு பரபரப்பான கட்டத்தை எட்டியிருந்தது. இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு விக்கெட் மட்டுமே தேவையான நிலையில் தீப்தி சர்மா இங்கிலாந்து அணியின் சார்லட் டீனை மன்கட் முறையில் ரன் அவுட் ஆக்கியிருந்தார். தீப்தி செய்த இந்த ரன் அவுட் சம்பவம் பெரும் விவாதங்களை கிளப்பியது.

இங்கிலாந்து அணியின் சீனியர் வீரர்களான ஆண்டர்சன், ப்ராட் போன்றோர் தீப்தி சர்மா Spirit of the Game ஐ குலைத்துவிட்டதாக கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்திய அணியின் கேப்டனான ஹர்மன்ப்ரீத் கவுர் தீப்திக்கு துணையாக நிற்க இங்கிருந்து அஷ்வின், சேவாக், கைஃப் என அத்தனை பேரும் தீப்திக்கு ஆதரவாக கச்சைக் கட்டி கொண்டிருக்கின்றனர். வீரர்கள் போக விமர்சகர்கள், ரசிகர்கள் என கிரிக்கெட் சமூகத்தின் அத்தனை தரப்புமே தீப்தி சர்மா செய்த ரன் அவுட்டை பற்றியே விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த விவாதமெல்லாம் உணர்த்துவது ஒன்றே ஒன்றைத்தான். பெண்கள் கிரிக்கெட் கவனிக்கப்படுகிறது. பெண்கள் கிரிக்கெட்டை பற்றி மணிக்கணக்கில் விவாதம் செய்யும் அளவுக்கான ஒரு இடத்தை நோக்கி அது நகர்ந்திருக்கிறது. பெண் கிரிக்கெட்டர்களுக்கும் ஒரு நாயகத்தன்மையை கொடுத்து அள்ளிக் கொண்டாட ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள்.

Jhulan Goswami

ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா போன்றோர் கொண்டாடப்பட்டும் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதெல்லாம் இப்போதைய நிலைமை. இவையெல்லாம் கடந்த ஐந்தாண்டுகளுக்குள் சாத்தியப்பட்டவை மட்டுமே. அதற்கு முந்தைய காலம் எப்படி இருந்தது? அதாவது ஜூலன் கோஸ்வாமியும் மிதாலி ராஜூம் அறிமுகமாகி வளர்ந்து வந்த காலக்கட்டம் எப்படியாக இருந்தது? தீப்தி சர்மா நொடிப்பொழுதில் பற்ற வைத்து கிளப்பிவிட்ட விவாதத்தை போன்று பெண்கள் கிரிக்கெட் சார்ந்து ஒரு விஷயமாவது அப்போது விவாதமாகியிருக்குமா? பெண்கள் கிரிக்கெட்டை பற்றி ரசிகர்கள் சிலாகித்து பேசுவதற்கான ஒரு வெளி அப்போது இருந்ததா? தனிப்பட்ட முறையில் பெண் கிரிக்கெட்டர்கள் யாராவது கொண்டாடப்பட்டார்களா? ஏற்றுக்கொள்வதற்கு கடினமாக இருந்தாலும் இந்த எல்லா கேள்விகளுக்கும் இல்லை என்பது மட்டுமே பதிலாக இருக்கும். புறத்தில் இப்படியெனில் பெண்கள் கிரிக்கெட்டிற்குள்ளாவது எதாவது சரியாக இருந்ததா? நிச்சயமாக இல்லை. அந்த காலக்கட்டத்தில் பெண்கள் கிரிக்கெட் பிசிசிஐயின் கட்டுப்பாட்டிற்குள்ளேயே வரவில்லை. முறையான ஊதியம், முறையான பயண வசதிகள், முறையான கட்டமைப்புகள் என எதுவுமே பெண்கள் கிரிக்கெட்டில் இல்லை.

இந்த அத்தனை இல்லாமைகளுக்கும் மத்தியில்தான் ஜூலன் கோஸ்வாமி அறிமுகமாகி 20 ஆண்டுகள் இந்திய அணிக்காக ஆடி முடித்திருக்கிறார்.

அவர் வீழ்த்திய விக்கெட்டுகள் எடுத்த ரன்கள் போன்ற எண்களை ஓரமாக வையுங்கள். முதலில் இந்த 20 ஆண்டுகள் அவர் இந்த கவனிப்பாரற்ற சூழலில் சர்வைவ் செய்தாரே அதற்காகவே அவரை கொண்டாட வேண்டும்.

ஜூலன் 2002 இல் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகினார். இந்திய ஒருநாள் அணிக்கு அறிமுகமான 61 வது வீராங்கனை அவர். இப்போது வரை மொத்தமாக 137 வீராங்கனைகள் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகியிருக்கிறார்கள். அதாவது, ஜூலன் இந்திய ஜெர்ஸியை அணிந்த பிறகு 76 வீராங்கனைகள் இந்திய அணிக்கு அறிமுகமாகியிருக்கிறார்கள். இதில் எத்தனை வீராங்கனைகளின் முகம் நமக்கு பரிச்சயமாகியிருக்கிறது. அதிக சிரத்தையெல்லாம் எடுக்க வேண்டியதிருக்காது. எப்படியும் விரல்விட்டு எண்ணும் அளவிலேயே இருக்கும். ஜூலனின் சர்வைவலை கொண்டாட வேண்டும் என்பதற்கான காரணம் இதுதான்.

பிழைத்திருத்தலே பெருவெற்றி எனும் சூழலில் ஜூலன் அதை அநாயாசமாக செய்திருக்கிறார்.

சர்வைவல் என்பதற்குள் இன்னும் ஆழமாக செல்லும்போதுதான் அவரின் கதாபாத்திரமும் செயல்பாடுகளும் முக்கியமானதாக மாறுகிறது. ஜூலன், பெண்கள் கிரிக்கெட்டின் வேகப்பந்து வீச்சாளர். ஒரு வேகப்பந்து வீச்சாளர் 20 ஆண்டுகளை கடந்து வீசுகிறார் என்பது மலைத்துப் பார்க்க அத்தனை தகுதியும் உடைய காட்சிதான். வயது ஏற ஏற உடல்சார்ந்து ஏற்படும் ஒவ்வொரு மாற்றத்திற்கு ஏற்பவும் பந்துவீசும் முறையிலும் சில மாற்றங்களை செய்து தகவமைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அந்த தகவமைத்தல் மட்டும்தான் நீடித்து நிலைக்கச் செய்யும். இந்த தகவமைத்தலை சரியாக நிகழ்த்த முடியாமல் போனாலோ அல்லது தகவமைத்தலுக்கு பிறகு சரியான ரிசல்ட்டை கொடுக்கத் தவறினாலோ அந்த பந்துவீச்சாளர் மூட்டை முடிச்சை கட்ட வேண்டியது. இதைத் தொடர்ந்து வெற்றிகரமாக செய்து கொண்டிருப்பவர்களென இங்கிலாந்தின் ஆண்டர்சனையும் ப்ராடையும் குறிப்பிடலாம். காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்ற மாற்றமும் அவர்களிடம் இருக்கும் அணி எதிர்பார்க்கும் தாக்கத்தையும் ஏற்படுத்திக் கொடுப்பார்கள். இந்த விஷயத்தில் ஜூலன் கோஸ்வாமியையும் ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஸ்டம்ப் டூ ஸ்டம்பாக டைட்டான லைனில் அவர் வீசிய பந்துகளின் வீரியம் 20 வருடமாக குறையவே இல்லை. சமீபத்தில் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஜூலனின் பந்துவீச்சை எதிர்கொண்ட ரோஹித் சர்மா ஜூலனின் இன்ஸ்விங் பந்துகள் தன்னை கடுமையாக திணற வைத்ததாக கூறியிருந்தார்.

Jhulan Goswami

நேற்று இங்கிலாந்துக்கு எதிராக ஆடிய கடைசி போட்டியில் கூட அவர் வீசிய கடைசி 16 பந்துகளில் ஒரு ரன்னை கூட கொடுத்திருக்கவில்லை. 20 வருட கரியரில் வீசிய கடைசி பந்து வரைக்குமே ஆதிக்கம் செலுத்துவிட்டுதான் ஓய்ந்திருக்கிறார்.

ஒரு பௌலராக, ஒரு கேப்டனாக, இளம் வீராங்கனைகள் துவழ்ந்து போகையில் தோள் மீது கை போட்டு அரவணைக்கும் சீனியராக என இந்திய பெண்கள் கிரிக்கெட்டில் ஜூலன் வகித்த அத்தனை கதாபாத்திரத்தையும் மிகச்சிறப்பாகவே செய்து முடித்திருக்கிறார்.

ஜூலனின் வாழ்க்கை வரலாறும் படமாகிறது. ‘சக்தா எக்ஸ்பிரஸ்’ என்ற படத்தில் அனுஷ்கா சர்மா ஜூலன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் அறிமுக ட்ரெய்லரில், ஒரு போட்டியில் ஆட ஜூலன் இந்திய அணியை முன் நின்று அழைத்து மைதானத்துக்குள் வர மைதானமே காலியாக இருக்க பின்னணியின் வாய்ஸ் ஓவரில்

‘இந்த டீம் ஜெயிச்சாலும் தோத்தாலும் யாரும் கவலப்பட போறதில்ல. ஏனா… இந்த டீமுக்குதான் ஃபேன்ஸூனு யாருமே கிடையாதே’ என வசனம் ஒலிக்கும்.

உண்மைதான். ஜூலன் அப்படியான ஒரு காலக்கட்டத்தில்தான் இந்திய அணிக்காக ஆடினார். ஆனால், அந்த அணியை அப்படியே விட்டு விட்டு செல்லவில்லை.

Mithali Raj & Jhulan

இன்று இந்திய பெண்கள் அணி ஆடினால் மைதானம் முழுமையாக ரசிகர் கூட்டத்தால் நிரம்பும். கரகோசங்களும் ஆர்ப்பரிப்புகளும் விண்ணை முட்டும். இதற்கான விதையை போட்டது ஜூலன் கோஸ்வாமி, மிதாலி ராஜ் போன்ற வீராங்கனைகளே என்பதை யாராலும் மறுக்க முடியாது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *