டெக்ரான்: ஈரானில் ஹிஜாப் அணியாததால் கைது செய்யப்பட்ட இளம்பெண், போலீஸ் காவலில் மர்மமான முறையில் இறந்ததை தொடர்ந்து நடக்கும் போராட்டங்களில் ஏற்பட்ட மோதலில் 31 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதை அமல்படுத்துவதற்காக, ‘ஹிஜாப் படை’ என்ற தனி போலீஸ் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. ஹிஜாப்பை முறைப்படி அணியாத அல்லது அதை அணியாத பெண்கள் மீது இந்த தனிப்படை வழக்குப் பதிவு செய்து, கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கிறது.

கடந்த வாரம் ஹிஜாப் அணியாமல் சென்ற மாஷா அமினி (22) என்ற இளம்பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டார். போலீஸ் காவலில் இருந்த அவர், மர்மமான முறையில் இறந்தார். போலீசார் அவரை அடித்து கொன்று விட்டதாக, ஈரான் முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பெண்ணுக்கு நீதி கேட்டும், ஹிஜாப்புக்கு எதிராகவும் ஈரான் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது, நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. தலைநகர் டெக்ரான் உட்பட 13 நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பதற்றம் நிலவி வருகின்றது.

போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படைகளுக்கும் இடையே பல இடங்களில் மோதல் நடக்கிறது. இதில், இதுவரையில் 31 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில், போலீசாரும் அடங்குவார்கள். இருப்பினும், அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த அரசு பல்வேறு தடைகளை விதித்து வருகிறது. போராட்டம் பரவுவதை தடுக்க இணையதள சேவையும், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பயன்பாடுகளும் முடக்கப்பட்டு உள்ளன.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.