‘பொன்னியின் செல்வன் பாகம் – 1’ படத்தின் 5-வது பாடலாக வெளிவந்தது இந்த ‘அலைகடல்’ பாடல். இந்த ஆல்பத்தின் ஆகச்சிறந்த மியூசிக்கல் மெலடி ட்ரீட்டாக வந்துள்ளது . வரலாற்றுப் புனைவான இக்கதைக்களத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையை நங்கூரமிட்டு நிற்க செய்கிறது இந்தப்பாடல்.
இயக்குநர் மணிரத்னத்திற்கும் கடலுக்கும் இடையிலான தொடர்பு விவரிக்க இயலாதது. பகல் நிலவு தொடங்கி வரப்போகும் பொன்னியின் செல்வன் வரை, மணிரத்னத்தின் படங்களில் கடலும், கடல் சார்ந்த மக்களின் வாழ்வியலும் அவ்வளவு பேசப்பட்டிருக்கும். அவரது சில படங்களில் ஒரு முறை வந்தால்கூட கடல் சார்ந்த காட்சிகள் அத்தனை அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
இந்த நிலையில், பொன்னியின் செல்வன் பாகம்-1 படத்தில் ஓடம் செலுத்தும் பெண் பூங்குழலிக்கான பாடல்தான் இந்த அலைகடல் பாடல். இந்தப் பாடல் தாய்லாந்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் பல்வேறு சிரமங்களுக்கு இடையே பாடலுக்கான காட்சிகளை நடுக்கடலில் சென்று காட்சிப்படுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
பூங்குழலி கதாப்பாத்திரம் பொன்னியின் செல்வன் நாவலின் மிக முக்கியமான கதாப்பாத்திரம். அருள்மொழி வர்மன் மற்றும் வந்தியத்தேவனை படகு மூலம், இலங்கைக்கு அழைத்துச் செல்பவள் இவள்தான்.
“அவள் பூங்குழலியாகத்தான் இருக்க வேண்டும். பெயருக்குத் தகுந்தாற் போல் இவள் கூந்தலில் ஒரு தாழம்பூவின் இதழ் அழகு பெற்றுத் திகழ்ந்தது. நீண்ட கரிய கூந்தல் சுருண்டு சுருண்டு விழுந்து அவளுடைய கடைந்தெடுத்த தோள்களை அலங்கரித்தன. கடல் அலைகள் கரையில் ஒதுக்கும் சங்குகள், சிப்பிகள் முதலியவற்றை ஆரமாக்கி அவள் அணிந்து கொண்டிருந்தாள். ஆனால் இவையெல்லாம் அவளுடைய மேனியில் பட்டதனால் தாங்களும் அழகு பெற்றனவேயன்றி, அவளை அலங்கரித்ததாகச் சொல்ல முடியாது. அழகே ஒரு வடிவம் தாங்கி வந்தால், அதற்கு எந்த ஆபரணத்தைக் கொண்டு அழகு செய்ய முடியும்?” என்று பூங்குழலியை நாவலில் வர்ணித்திருப்பார் கல்கி.
அதுமட்டுமின்றி, “நீ பாடினால் கடலுங்கூட இரைச்சல் போடுவதை நிறுத்தி விட்டுப்பாட்டைக் கேட்குமாம்! அது உண்மைதானா? என்று பூங்குழலியை பார்த்து வந்தியத்தேவன் கேட்பதுபோல் நாவலில் ஒரு காட்சி வரும். இதனை நன்றாக உள்வாங்கிக் கொண்டு பாடலை எழுதியிருக்கிறார் படத்தின் Executive Producer-ஆன சிவா ஆனந்த். இந்தப் பாடலை ஆன்டரா நண்டி (Antara Nandy) பாடியிருக்கிறார். பாடலின் சூழலை உணர்ந்து பாடியிருந்தாலும், செஞ்சூரியனை சஞ்சூரியன் என பாடுவதை மட்டும் தவிர்த்துவிட்டு கேட்டால், பாடலை மிக சிறப்பாகவே பாடியிருக்கிறார்.
இளம்பெண் பூங்குழலி மனதை பிரதிபலிக்கும் வகையில் இப்பாடல் அமைந்திருக்கிறது. அவள் வயதுக்குரிய தனிமை, வெறுமை, ஏக்கம், எதிர்பார்ப்பு, கனவு, ஆசை, ப்ரியம், காதல், நினைவு என அவளது ஆழ்மனதின் அத்தனை உணர்வுகளையும் வெளிப்படுத்தியிருக்கிறது இந்தப் பாடல். ஆன்ட்ரா நண்டியும் வெகு சிறப்பாக தனது குரல் மூலம் இந்த உணர்வுகளை கடத்தியிருக்கிறார். குறிப்பாக, ஏலலோ என்று வரும் இடங்கள் அனைத்தும் பாடல் கேட்பவர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது. அதிலும், 5.14 நிமிடம் கொண்ட இந்தப் பாடலின் இரண்டாவது சரணத்துக்கு முன் வரும் இடையிசையில், அதாவது 2.59-வது நிமிடத்தில் இருந்து 3.26-வது நிமிடம் வரை வயலின் மற்றும் ஸ்ட்ரிங்ஸ் இசைக்கோர்ப்பு பிரமாண்டத்தின் உச்சம்.
இருள் கவியும் இரவின் அமைதியும், பட்டொளி வீசும் பால் நிலாவின் வெளிச்சமும், அலைகளற்ற கடலின் தனிமையில், பூங்குழலியுடன் அவளது பாடலைக் கேட்டுக்கொண்டு பயணிப்பது எத்தனை சுகமானது. பூங்குழலியின் உள்ளத்தின் வெளிப்பாடுகளை,
“இன்பம் துன்பம் ரெண்டும்
இடம் பொருள் மாறும்
இரவுகள் பகல் ஆகும்
முகில் மழை ஆகும்
முறுவலும் நீர் ஆகும்
வான் எங்கும் சாயாத செஞ்சூரியன்
வரதோ அருங்காலையில் நம் பூமியில்
நான் ஒரு முறை வாழ்ந்திட
மறு கரை ஏறிட
பல பல பிறவிகள் கொள்வேனோ
சொல்லிடு
பேசாத மொழி ஒன்றில் காவியமா
தானாக உருவான ஓவியமா
தாய் இன்றி கருவான ஓர் உயிரா
ஆதாரம் இல்லாத காதலா
கண இடை வெளியில் கரம் பிடிப்பாயா
தரை தொடும் வரையில் மணம் முடிப்பாயா
ஓர் பார்வை ஓர் வாக்கு தாராயோ
அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ
ஏலோ ஏலேலோ
அடி மன தாகம் விழியில் தெரியாதோ
ஏலோ ஏலேலோ
வாழ்க்கையில் இன்பம் துன்பம் இரண்டும் வரும் என்று பொருள் தரும் வகையில், தனது ஆழ்மனதின் ஆசைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு தனக்குத்தானே ஆறுதல் கூறிக்கொள்ளும் வகையில் இந்தப் பாடல் எழுதப்பட்டிருக்கிறது. ஆரம்ப வரிகளில் அழகாக, கடலின் ஆழத்தை நிலா அறியாது, அடிமனத்தின் தாகம் முகத்தில் தெரியாது என்று எழுதியிருக்கிறார் பாடலாசிரியர் சிவா ஆனந்த்.
அதேபோல் தனது பரிதவிப்பை, நான் என்ன யாரும் பேசாத மொழியில் எழுதப்பட்ட காவியமா, இல்லை யாரும் வரையாமல் தானே உருவான ஓவியமா, தாயே இல்லாமல் உருவான உயிரா நான், எனக்கு வந்திருப்பது ஆதாரம் இல்லாத காதலா என்பது உள்ளிட்ட வரிகள் அனைத்தும் ரசிகர்கள் மனதில் இழையோடியிருக்கிறது.
பிற்காலச் சோழர்களின் வரலாற்றை முழுமையாக்கியதில் பெரும்பங்கு வகித்தவை திருவாலங்காட்டுச் செப்பேடுகள். இச்செப்பேடுகளில், ராஜராஜ சோழனின் இலங்கை, சாளுக்கிய, ஆந்திர, கேரள போர் வெற்றிகள் குறித்த செய்திகள் கூறப்பட்டுள்ளன.
ராஜராஜனின் பெரிய வெற்றிகளில் ஒன்றாகச் சொல்லப்படுவது கி.பி.993-க்கு முன்பு இலங்கை மீது போர் தொடுத்து வென்றது.
இலங்கையில் ஒரு பேரரசு என்று எதுவும் கிடையாது. நிறைய யுத்தங்கள், வாரிசு அரசியல்கள். இதனால் இங்கிருந்து இலங்கை சென்ற மன்னர்கள் ஏதாவதொரு அரசனை வீழ்த்தி அவருடைய பிரதேசத்தை மட்டுமே ஆண்டிருக்கிறார்கள். ஆனால் இலங்கை தீவின் பெரும்பான்மையான பகுதிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த முதல் மன்னர் என்று ராஜராஜ சோழனைத்தான் கூற வேண்டும்.
இலங்கையை வென்று அங்கு சாம்ராஜ்ஜியத்தை அமைக்க விரும்பாத ராஜராஜன் போரின் மூலம் உறுதியான வணிக கலாசார பாலம் அமைக்க விரும்பினார். இலங்கை சோழர்கள் வசம் இருந்ததால், அங்கு உற்பத்தியாகும் பொருள்கள் தஞ்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இலங்கை மக்களின் பண்பாட்டு உறவுக்கு முக்கியத்துவம் அளித்ததால்தான் ராஜராஜனால் அங்கு நீண்ட காலம் ஆட்சி செய்ய முடிந்தது என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.
அலைமோதும் கடல் நடுவில், காற்றின் வேகத்திற்கு இணையாக படகை செலுத்தியபடி, இளமைப்பருவ விரகதாபத்தில் தகிக்கும் பூங்குழலியின் அழகையும், நிலவொளியின் குளுமையையும் ரசித்தபடி பூங்குழலிக்கு நூல் விட்டபடி பயணிக்கும் வந்தியத்தேவனுடன் நாமும் பயணிக்க இன்னும் 7 நாட்கள் காத்திருக்க வேண்டும்.
இணைப்பு : Alaikadal – Lyric Video