ஈரானை சேர்ந்த இளம்பெண் ஹிஜாபை தவறாக அணிந்திருந்ததாக காவல்துறையால் கைது செய்யப்பட்டு, இரண்டு நாள்களுக்கு பின், மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், உலக நாடுகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. காவல்துறையின் முரட்டுதனத்தால் உயிரிழந்த இளம்பெண்ணுக்கு ஆதரவாகவும், ஹிஜாப் அணியும் முறை குறித்தான சட்டத்தை எதிர்த்தும் ஈரானிய பெண்கள் வீதியில் போராடி வரும் காட்சிகள் அரபு நாடுகளில் தற்போது பேசுபொருளாகி உள்ளது.

ஈரான் நாட்டை சேர்ந்த, மஹ்சா அமினி என்ற 22 வயது இளம்பெண் தனது குடும்பத்தாருடன் தெஹ்ரானுக்கு கடந்த 13-ம் தேதி பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது மஹ்சா அமினி தனது தலையில் ஹிஜாபை மிகவும் தளர்வாக அணிந்திருந்தாக குற்றம் சாட்டப்பட்டு, போலீஸாரால் கைது செய்யப்பட்டார். ஈரான் நாட்டுப் பெண்கள் ஹிஷாப் அணிவது குறித்தான சட்டங்களை மேற்கோள் காட்டிய காவல்துறையினர், அமினியை கைது செய்து இரண்டு நாள்களாகியும் விடுவிக்கவில்லை. இதனிடையே, கடந்த 16-ம் தேதி அன்று மர்மமான முறையில் காவல் நிலையத்தில் அமினி இறந்து கிடந்துள்ளார்.

ஈரானில் முடிவெட்டி போராடிய பெண்கள்

அமினி மர்மமான முறையில் இறந்தது குறித்து அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல்துறையினரிடம் முறையிட, அமினியை காவல்துறை தவறாக நடத்தியதாக பரவி வரும் குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும், அவர் மாரடைப்பால் தரையில் மயங்கி விழுந்து, இரண்டு நாள்களாக கோமாவில் இருந்து உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். காவல்துறையினரின் விளக்கத்தை ஏற்க மறுத்த பெற்றோர், அமினிக்கு இதயம் தொடர்பான எவ்வித பிரச்னைகளும் இதுவரை இல்லை என திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

இதனிடையே, கடந்ந செப்டம்பர் 17-ம் தேதி, குர்திஷ் நகரமான சாகேஸில் அமினியின் இறுதி ஊர்வலத்திற்குப் பிறகு, அந்நகரப் பெண்கள் வெகுண்டெழுந்து அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். சாகேஸ் நகர பெண்களின் கிளர்ச்சி தெஹரான் மாகாணத்தையும் கடந்து, ஈரான் முழுவதும் தற்போது பரவி பெண்களின் கிளர்ச்சிக்கு வழிகாட்டியுள்ளது. வீதிகளில் இறங்கி கிளர்ச்சியில் ஈடுபட்ட பெண்கள், தாங்கள் அணிந்திருந்த ஹிஜாபை கிழித்து பெருங்கோபத்துடன் அதை காற்றில் சுழற்றியும், எரித்தும் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, சில பெண்கள் ஹிஜாபை கழற்றி சுற்றி எரிந்து விட்டு, தங்களது கேசத்தை வெட்டி, அதை கம்பங்களில் கொடியாக ஏற்றி, அரசின் ஹிஜாப் சட்டங்களுக்கு எதிரான தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர்.

ஈரானிய பெண்கள் தங்களது கேசத்தை வெட்டி, அவற்றை கம்பங்களில் கொடியேற்றியும், ஹிஜாபை கிழித்தும், எரித்தும் அரசின் ஹிஜாப் தொடர்பான கடுமையான விதிமுறைகளுக்கு எதிராக போராடி வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

மேலும், போராட்டம் நடைபெற்ற சில இடங்களில், மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்று காவல் பணியில் ஈடுபட்டிருந்த இளம் ராணுவ வீரர்களில் சிலரை துரத்திச் சென்று கடுமையாக தாக்கியும், காவல்துறை மீதான தங்களது கோபத்தினை பதிவு செய்துள்ளனர். தலைநகர் தெஹ்ரானில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலில், 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 38 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் குர்திஷ் நகர மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐ.நா சபை

1979-ம் ஆண்டு நடைபெற்ற ஈரானிய கிளர்ச்சிக்குப் பின், அந்நாட்டில் விதிக்கப்பட்ட இஸ்லாமிய சட்டங்களின் படி, பெண்கள் தங்கள் தலைமுடியை மறைப்பதும், தங்கள் உருவங்களை மறைக்க நீண்ட, தளர்வான ஆடைகளை அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை மீறுபவர்கள் பொதுமக்களின் கண்டனத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழலும், அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டும், சிலருக்கு அபராதம் விதிக்கப்படுவதும் நடைமுறையில் இருந்து வருகிறது.

ஈரான் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான மசிஹ் அலினெஜாட், ’பெண்கள் தலைமுடியை மறைக்கவில்லை என்றால், அவர்கள் பள்ளிக்குச் செல்லவோ, அலுவலகங்களில் வேலைபார்க்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பாலின வெறி ஆட்சியால் பெண்களாகிய நாங்கள் மிகவும் சோர்வடைந்துள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார். மேலும், மசிஹ் தனது ட்விட்டர் பதிவில், `ஈரானின் பெண்களாகிய நாங்கள் எங்கள் ஹிஜாபை அகற்றி, மத சர்வாதிகாரிகளுக்கு எதிராக முழக்கமிடுகிறோம், நாங்கள் சிறைக்கு அனுப்பப்படுவோம் அல்லது கொல்லப்படுவோம். ஆனால் எங்களுக்கு ஒரு கனவு இருக்கிறது. இஸ்லாமிய சர்வாதிகார ஆட்சியை அகற்ற விரும்புகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக, கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஐநா சபை, உயிரிழந்த பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த சில நாள்களாக அமினிக்கு ஆதராக தொடர்ந்து வரும் போராட்டங்களின் எதிரொலியாக, இணைய சேவை முடக்கம், சமூக ஊடகங்கள் கண்காணிப்பு, தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகள் முடக்கம் ஆகியவற்றை கையிலெடுத்து போராட்டங்களை ஒடுக்க, ஈரானிய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.