நீலகிரியில் சர்ச்சைக்குப் பெயர் போன ஊராட்சியாக மேலூர் ஊராட்சி இருந்து வருகிறது. இந்த ஊராட்சியின் தலைவராக அ.தி.மு.க-வைச் சேர்ந்த ரேணுகாதேவி பதவி வகித்து வருகிறார். துணைத்தலைவர் பதவியை தி.மு.க-வைச் சேர்ந்த நாகராஜ் வகித்து வருகிறார். இந்த நிலையில், ஊராட்சித் தலைவர் ரேணுகாதேவி, “செய்யாத வேலைக்கு பில் கேட்டு டார்ச்சர் செய்கிறார், அலுவலகப் பணியை சுதந்திரமாக மேற்கொள்ள விடுவதில்லை” என துணைத்தலைவர் நாகராஜ்மீது புகார் கூறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து மேலூர் ஒன்றியத்தில் பினாமி பெயரில் டெண்டர் எடுத்து தலைவர் ரேணுகாதேவி முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறார் என நாகராஜ் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, துணைத்தலைவர் நாகராஜின் வாகனத்தை மர்ம நபர்கள் இரவில் தீ வைத்து எரித்தனர். இது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஒப்பந்ததாரர்களுடன் மேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த சந்திப்பின்போது துணைத்தலைவர் நாகராஜ், “அதிகாரிகளுக்கு எல்லா கமிஷனும் கொடுத்துவிட்டால் நாங்கள் சும்மா உட்கார்ந்துவிட்டு போகணுமா?” என சதவிகித அடிப்படையில் பகிரங்கமாக கமிஷன் கேட்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
இது குறித்து மேலூர் ஊராட்சியின் தலைவர் ரேணுகாதேவியை தொடர்பு கொண்டு பேசினோம். “இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது. இந்தக் கூட்டம் எப்போது நடத்தப்பட்டது என எனக்கு எதுவும் தெரியாது” என முடித்துக்கொண்டார்.

வீடியோ விவகாரம் தொடர்பாக துணைத்தலைவர் நாகராஜிடம் பேசினோம். “வீடியோவுக்கு இதில் வரும் ஆடியோவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, யாரோ இப்படி செய்துவிட்டார்கள்” என மழுப்பலான பதிலைச் சொன்னார்.