பெயர் குறிப்பிடப்படாதவர்களிடமிருந்து அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடை அளவை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு, தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியிருக்கிறது. அதன்படி தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், “பெயர் குறிப்பிடப்படாதவர்களிடமிருந்து அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடையின் வரம்பு, தற்போது 20 ஆயிரம் ரூபாயாக இருக்கிறது. இதற்கு அதிகமாக நன்கொடை பெற்றால், அது யாரிடமிருந்து பெறப்பட்டது என்ற விவரத்தை அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டும். இந்த வரம்பை 2,000 ரூபாயாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் அரசியல் கட்சிகள் பெறும் மொத்த நன்கொடையில், 20 சதவிகிதம் அல்லது 20 கோடி ரூபாய், இவற்றில் எது குறைவோ, அந்தத் தொகையை மட்டுமே ரொக்கமாக பெற வேண்டும் என்ற கட்டுப்பாடும் விதிக்க வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது.

அரசியல் கட்சிகளுக்கு ஒவ்வொரு கார்ப்பரேட் நிறுவனமும் தேர்தல் நேரத்தில் கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடையாக வழங்குகின்றன. சமீபத்தில் தேர்தலில் வெளிப்படைத்தன்மைக்காகப் போராடும் தொண்டு நிறுவனம் ஒன்று, ஒவ்வோர் அரசியல் கட்சியும் எவ்வளவு நன்கொடை பெற்றிருக்கின்றன என்பது குறித்து அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தது. அதில், 2019-20-ம் ஆண்டு பா.ஜ.க ரூ.720.407 கோடி நன்கொடை பெற்றிருக்கிறது. மொத்தம் 2,025 கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து இந்தத் தொகை கிடைத்திருக்கிறது. தேசியக் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் கொடுத்திருக்கும் நன்கொடையின் அளவு 2017-18-ம் ஆண்டைவிட 2018-19-ம் ஆண்டில் 109 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பொதுவாக அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்துக்கு அதிகமாக நன்கொடை பெற்றிருந்தால் யார் கொடுத்தது என்பது குறித்து தேர்தல் கமிஷனிடம் தகவல் கொடுப்பது வழக்கும். தேர்தல் கமிஷனரிடமிருந்து அந்தத் தகவல்களைப் பெற்று தொண்டு நிறுவனம் இந்த அறிக்கையைத் தயாரித்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி 2019-20-ம் ஆண்டில் ரூ.133 கோடியை 154 நிறுவனங்களிடமிருந்து நன்கொடையாகப் பெற்றிருக்கிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சி ரூ.57 கோடியை நன்கொடையாகப் பெற்றிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2019-20-ம் ஆண்டில் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து நன்கொடை எதுவும் பெறவில்லை.

புரூடண்ட் எலக்ட்ரோல் ட்ரஸ்ட் 2019-20-ம் ஆண்டில் பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகளுக்கு அதிகபட்சமாக ரூ.247 கோடியை நன்கொடை கொடுத்திருக்கிறது. இதில் பா.ஜ.க மட்டும் ரூ.216 கோடியை நன்கொடையாகப் பெற்றிருக்கிறது. ஒரே ஆண்டில் மொத்தம் 38 முறை இந்த ட்ரஸ்ட் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியிருக்கிறது.

2018-19-ம் ஆண்டில் ரூ.881 கோடியும், 2014-15-ம் ஆண்டில் ரூ.573 கோடியும் அரசியல் கட்சிகள் நன்கொடையாகப் பெற்றிருக்கின்றன. மேலும் 2012-13-ம் ஆண்டிலிருந்து 2019-20-ம் ஆண்டுக்கு இடையே அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் கொடுத்த நன்கொடையின் அளவு ஆயிரம் மடங்கு அதிகரித்திருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

இதேபோல், கடந்த 2004-2021-க்கு இடையிலான காலகட்டத்தில், அதாவது கடந்த 17 ஆண்டுகளில், எட்டு தேசியக் கட்சிகள் அறியப்படாத நபர்கள் மூலம் நன்கொடையாக ரூ.15,000 கோடிக்கு மேல் திரட்டியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக தேர்தல் சீர்திருத்தங்களில் பணியாற்றும் அரசு சாரா அமைப்பான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) தயாரித்த அறிக்கையில், “17 ஆண்டுகளில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்குப் பெயர் குறிப்பிடாமல் 4,262 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியிருக்கிறார்கள். அதாவது, நன்கொடையாளர்களின் பெயர் கொண்ட ரசீதுகள் தேர்தல் ஆணையம், வருமான வரித்துறைக்கு வெளியிடாமல் நன்கொடை வழங்கியவர்கள். மேலும், வழங்கப்படும் நிதிக்கான ஆதாரங்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் தொடர்பாக, விசாரிக்கப்படாமல் தேசியக் கட்சிகளுக்கு இவ்வளவு பெரிய பணம் வருவது கவலையளிக்கிறது.

அனைத்துக் கட்சிகளுக்கும் வழங்கப்பட்ட நன்கொடைகளில் 36 சதவிகிதத்துக்கும் அதிகமான நிதி யாரிடமிருந்து வந்தது எனக் கண்டுபிடிக்க முடியாதவை. ஜூன் 2013-ல் கட்சிகள் RTI சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டாலும், நிதி தொடர்பான முழு வெளிப்படைத்தன்மை, தற்போதைய சட்டங்களின் கீழ் கொண்டுவர சாத்தியமில்லை. 2020-21-ல் கொரோனா தொற்றுநோய் பரவியபோது நாடு ஸ்தம்பித்து, லட்சக்கணக்கானோர் வேலை இழந்தனர். இந்த நிலையிலும், முன்னணி அரசியல் கட்சிகள், தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட ரூ.325 கோடி உட்பட, ரூ.690 கோடி வரை வருமானமாகச் சேகரித்திருக்கின்றன. 2020-21-ம் ஆண்டில் தேர்தல் பத்திரப் பணத்தில் 77 சதவிகிதம், அதாவது ரூ.250 கோடி, 27 மாநிலக் கட்சிகளுக்குச் சென்றிருக்கிறது.

ஸ்டாலின். மம்தா

ஸ்டாலின். மம்தா

அதில், சிவசேனா, டி.ஆர்.எஸ்., ஒய்.எஸ்.ஆர்-காங்., ஆம் ஆத்மி, பி.ஜே.டி., தி.மு.க., ஜே.டி(எஸ்)., ஜே.டி(யு)., ஏ.ஜி.பி., அ.இ.அ.தி.மு.க., ஏ.ஐ.எஃப்.பி., ஏ.ஐ.எம்.ஐ.எம்., ஏ.ஐ.யு.டி.எஃப்., ஜே.எம்.எம் மற்றும் எம்.என்.எஸ் ஆகியவை முக்கியக் கட்சிகளாக வரையறுக்கப்படுகின்றன. பா.ஜ.க, காங்கிரஸ், டி.எம்.சி, என்.சி.பி, சி.பி.எம், பி.எஸ்.பி, சி.பி.ஐ மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகிய எட்டு கட்சிகளுக்கு ரூ.74 கோடி கிடைத்திருக்கிறது” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இவ்வாறாக ஒவ்வொரு கட்சிகளும் தங்களின் கட்சி வளர்ச்சிக்காக நன்கொடைகள் பெற்று வரும் வேளையில் , தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்கு எழுதியிருக்கும் கடிதத்திற்கான பலன் இருக்குமா, அல்லது வழக்கமான கடிதமாக கடந்து சென்றுவிடுமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

நாராயணன் திருப்பதி

நாராயணன் திருப்பதி

“இந்தக் கடிதத்தின் சாராம்சத்தை மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு நிச்சயமாக ஏற்கும்” என அடித்து சொல்கிறார் பா.ஜ.க தமிழ்நாடு துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி. “பணமாக வாங்கக் கூடாது என்பது பா.ஜ.க தொடர்ந்து சொல்லிவரும் நிலைபாடு. முழுக்க முழுக்க பத்திரங்கள் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும்தான் வாங்க வேண்டும். அப்போதுதான் கருப்புப்பணம் ஒழிக்கப்படும். வாங்கப்படும் பணமும் கணக்காக இருக்கும். பா.ஜ.க-வுக்கு அதிக அளவு நன்கொடை வருகிறது என்பது உண்மைதான். ஆனால் ஆட்சிக்கும், கட்சிக்கும் மக்கள் மேலும் மேலும் அதிக அளவு பணியாற்ற வேண்டும் என்கிற காரணத்துக்காக எங்கள் மீதிருக்கும் அபிமானத்தினால் கொடுக்கும் விஷயம் இது. அப்படிக் கொடுக்கப்படும் பணம் அனைத்துமே கணக்கு காட்டப்படுகிறது. 90% மேல் பணம் இல்லாமல் பத்திரங்கள் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் கணக்குப்படிதான் வருகிறது. எனவே இங்கு ஒளிவு மறைவு என்பதற்கு இடமே இல்லை. பா.ஜ.க-வை பொறுத்தவரை ரூ.2,000 கூட இல்லை, ஒரு ரூபாய்கூட பணமாக வாங்கக் கூடாது என்பதுதான் நிலைபாடு” என்கிறார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: