Loading

மும்பை: மகாராஷ்டிராவில் ஒவ்வோர் ஆண்டும் மும்பையில் உள்ள சிவாஜி பார்க்கில் சிவசேனா கட்சி சார்பில் தசரா பேரணி நடத்தப்படுவது வழக்கம். கடந்த ஜூன் மாதம் அம்மாநிலத்தில் நடத்த அரசியல் கொந்தளிப்பால், தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் நடந்த கிளர்ச்சிக்கு பின்னர் சிவசேனா கட்சி இரண்டு அணிகளாக பிரிந்தது.

இந்த நிலையில், உத்தவ் தாக்கரேவின் தலைமையிலான சிவசேனாவும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் அக்கட்சியின் பாரம்பரிய தசரா பேரணியை சிவாஜி பார்க்கில் நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தன. இரண்டு அணிகளில் யாருக்கு அனுமதி வழங்கினாலும் அது சட்டம் – ஒழுங்கு பிரச்சினைக்கு வழிவகுக்கும் என்று கூறி, மும்பை மாநகராட்சி அனுமதி வழங்க மறுத்துள்ளது. எனினும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணி, சிவாஜி பார்க்கில் பேரணி நடத்த அனுமதி கோரி மும்பை உயர் நீதிமன்றத்தை நாடியது.

அதன்படி, பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது. விவாதத்தின்போது கட்சிக்கு உரிமை கோருவது தொடர்பான சர்ச்சை தீரும் வரை பேரணி குறித்து முடிவெடுக்க வேண்டாம் என ஷிண்டே தரப்பு கோரிக்கை முன்வைத்தது. ஆனால், இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனாவுக்கு பேரணி நடத்த அனுமதி கொடுத்துள்ளது. இந்த தீர்ப்பின் மூலம், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் பிரிவுக்கு இன்று பெரும் அடி விழுந்துள்ளது எனலாம். அதேநேரம், ஷிண்டே அணியுடனான போரில் உத்தவ் தாக்கரேவுக்கு நீதிமன்றத்தில் மூலம் கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.

நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ள தாக்கரே தலைமையிலான சிவசேனா, “நீதித்துறை மீதான எங்கள் நம்பிக்கை நிரூபணமானது. கடந்த பல ஆண்டுகளாக, தசரா பேரணி ‘சிவ்-தீர்த்தா’ (சிவாஜி பூங்காவைச் சேனா குறிப்பிடுவது போல) நடைபெறுகிறது. ஆனால் இந்த முறை ஷிண்டே பிரிவு மற்றும் பாஜக மூலம் அதை தடுக்க முயற்சி செய்தது. அதிர்ஷ்டவசமாக, நீதிமன்றம் அதை நிராகரித்தது” என தெரிவித்துள்ளது.

சிவசேனா 1966 முதல் ஒவ்வொரு ஆண்டும் தசரா அன்று பேரணியை நடத்தி வருகிறது. கரோனா தொற்றுநோய் காரணமாக 2020 மற்றும் 2021ல் பேரணி நடக்கவில்லை. இப்போது சிவசேனா இரண்டு பிரிவுகளாக பிளவுபட்டுள்ளதால், அனுமதி கிடைப்பதில் சிக்கல் நிலவியது. எனினும், “என்ன நடந்தாலும், சிவாஜி பூங்காவில் தசரா பேரணி நடத்துவேன்” என்று உத்தவ் தாக்கரே தொடர்ந்து சொல்லிவந்த நிலையில் இப்போது நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது. அக்டோபர் 5ல் நடக்கவுள்ள பேரணியில் மகாராஷ்டிராவின் வளர்ச்சிகள் குறித்து அவர் பெரிய உரையை ஆற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *