திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே செல்போன் கடை ஊழியர்களை கடத்தி வைத்து, அவர்களை மீட்க உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய 6 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 பைக் பறிமுதல் செய்யப்பட்டது. திருவள்ளூர் அருகே மணவாளநகரில் செல்போன் கடை நடத்தி வருபவர் டில்லிகணேஷ் (25). இவரது கடையில் முகம்மது, சாந்தகுமார், இப்ராகிம் ஆகிய 3 பேர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து கடையை மூடி, டில்லிகணேஷிடம் கடை சாவியை கொடுப்பதற்காக நடந்து சென்றனர். அப்போது அங்கு மறைவான இடத்தில் பதுங்கியிருந்த 5 பேர் கும்பல், செல்போன் கடை ஊழியர்கள் சாந்தகுமார், இப்ராகிம் ஆகிய இருவரையும் வலுக்கட்டாயமாக பைக்கில் கடத்தி சென்றனர்.

பின்னர் அவர்களை திருவள்ளூர், என்.ஜி.ஓ காலனியில் உள்ள பூங்காவில் அமரவைத்து, கடை உரிமையாளர் டில்லிகணேஷுக்கு போன் செய்து, கடை ஊழியர்களை விடுவிக்க ரூ.20 ஆயிரம் தரவேண்டும் என கொலைமிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி, எஸ்ஐ வெங்கடேசன், காவலர்கள் சிலம்பரசன், இளையவேல், மூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து, அப்பூங்காவில் இருந்த 2 கடை ஊழியர்களையும் மீட்டு, அங்கு பதுங்கியிருந்த 6 பேர் கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், பணம் கேட்டு மிரட்டி ஆள்கடத்தலில் ஈடுபட்டவர்கள் பெரியகுப்பம், மேட்டுத் தெருவை சேர்ந்த அன்பழகன் மகன் ஆகாஷ் (23), இஸ்மாயில் மகன் அன்சார் ஷெரிப் (23), கணேசன் மகன் உதயா (22), ஜேம்ஸ்பாபு மகன் ஆகாஷ் (19), கணேஷ் மகன் மோகன் (26), பூங்கா நகரை சேர்ந்த ஜான்சன் மகன் பிராங்க்ளின் (19) எனத் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இப்புகாரின்பேரில் திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணம் கேட்டு மிரட்டி ஆள்கடத்தலில் ஈடுபட்ட 6 பேரையும் கைது செய்தனர். இதில், மேட்டு தெரு ஆகாஷ்மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: