ஈரானில் அறநெறி பிரிவு காவலா்களால் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு 22 வயது இளம்பெண் உயிரிழந்ததை தொடர்ந்து ஈரான் முழுவதும் பல முக்கிய நகரங்களில் பெண்களே முன்னெடுத்த போராட்டங்கள் வெடித்தன.

22 வயதான குர்திஷ் பெண்ணான மாஷா அமினி, கடந்த பத்து நாட்களுக்கு முன்– செப்டம்பர் 13 அன்று தெஹ்ரானுக்குச் சென்றிருந்தபோது ஈரானின் அறநெறி பிரிவு காவலர்களால் கைது செய்யப்பட்டார். பொது இடங்களில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய ஆடைக் கட்டுப்பாடுகளை அமினி என்ற அந்த இளம்பெண் மீறியதாக குற்றம்சாட்டப்பட்டார். அந்நாட்டுப் பெண்கள் அவர்களின் கை, கால்கள் மற்றும் உடல்வாகு தெரியாத வண்ணம் மறைக்கும் ஹிஜாப் அணிந்தும் தளர்வான ஆடைகளை அணிய வேண்டும் என்றும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், மாஷா அமினி கைது செய்யப்பட்ட உடனேயே அறநெறிப் போலீஸாரால் தாக்கப்பட்டதாகவும், அதனால் பிறகு அப்பெண் மூன்று நாள் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் இதுவரையில் கிடைக்கப்பட்ட சாட்சிகள் கூறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம், அமினி, அந்நாட்டு காவல்துறையால் தாக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக கூறியுள்ளது. மறுபக்கம், போலீஸ் அதிகாரிகள் அமினியின் நிலைக்கு மாரடைப்புதான் காரணம் என்றும், 22 வயதான அவர் செப்டம்பர் 16 அன்று மருத்துவமனையில் இறந்தார் என்றும் கூறியுள்ளனர். இதற்கிடையே, ஈரானின் உள்துறை அமைச்சர் அஹ்மத் வஹிடி கூறுகையில், அமினிக்கு ஏற்கெனவே உடல்நலப் பிரச்சனைகள் இருந்ததாகவும், அதுதான் அவரது இறப்புக்கு காரணம் எனவும் கூறியுள்ளார். ஆனால், அதனை மறுத்த அமினியின் பெற்றோர், அமினி ஆரோக்கியமான உடல்நிலையில் இருந்ததாக கூறியுள்ளனர்.

மாஷா அமினி

2019-ம் ஆண்டில், எரிவாயு விலை உயர்வை எதிர்த்து மக்கள் வீதிகளில் இறங்கியதில் இருந்து, நடந்துகொண்டிருக்கும் அரசு எதிர்ப்புப் போராட்டம் ஈரான் கண்ட மிகப்பெரிய போராட்டமாகும்.

ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான உயரதிகாரி நடா அல்-நஷிஃப், ஈரானிய அதிகாரிகளை கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், அமினியின் மரணம் குறித்து கலப்படமற்ற, சுதந்திரமான விசாரணை தேவை எனவும் அழைப்பு விடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர், ‘மாஷா அமினியின் துயர, சித்திரவதை மரணம், தவறான சிகிச்சை குற்றச்சாட்டுகள் ஆகியவை உடனடியாக, பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படை தன்மையுடன் விசாரிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், ஹிஜாப் விதிகளை கடைப்பிடிக்காத பெண்களை அதிகாரிகள் குறிவைப்பது, துன்புறுத்துவது மற்றும் காவலில் வைப்பதை நிறுத்த வேண்டும் என்றும் சாடியுள்ளார்.

ஈரானின் அறநெறி காவலர்கள் (Iran’s morality police) யார்?

‘காஷ்ட்-இ எர்ஷாத்’ என அறியப்படும் ஈரானின் அறநெறி காவல்துறை 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவை பொது இடங்களில் பெண்கள் ஆடைக் கட்டுப்பாட்டிற்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக நிறுவப்பட்டது ஆகும். மால்கள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு பொது இடங்களில் இக்காவல்துறை கண்காணிப்பர். ஆண்கள் மற்றும் பெண் அதிகாரிகள் என இருவரையும் உள்ளடக்கியதாக அறியப்படுகிறது. இதன்மூலம் முழுதாக ஆடைக் கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத பெண்களை தடுத்து நிறுத்தவும் காவலில் வைக்கவும் அதிகாரிகள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

போராட்டம்:

மாஷா அமினியின் மரணத்திற்குப் பிறகு ஹிஜாப் சட்டங்கள், அறநெறி காவல்துறைக்கு எதிராக வெடித்த போராட்டங்களால் 16 வயது சிறுவன், பெண்கள் உட்பட கிட்டத்தட்ட பத்து பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போராட்டங்களுக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக, ஈரானில் பல பெண்கள் தங்கள் தலைமுடியை வெட்டி நூதன போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

ஈரானின் ஹிஜாப் சட்டம் சொல்வதென்ன?

1979 இஸ்லாமியப் புரட்சியைத் தொடர்ந்து, ஈரானில் அதிகாரிகள் பெண்களுக்கு கட்டாய ஆடைக் கட்டுப்பாடுகளை விதித்தனர். நாட்டில் உள்ள அனைத்துப் பெண்களும் பொது இடங்களில் தங்கள் உடல்வாகை வெளிக்காட்டாமல் மறைக்கும் வண்ணம் தலையுடன் சேர்த்து ஹிஜாப் அணிந்து, தளர்வான ஆடைகளை அணிய வேண்டும் என்பது விதி.

‘சரியான’ ஆடைகள் பற்றிய அதிகாரிகளின் கட்டுப்பாடின் கீழ் பெண்கள் இணங்குவதை உறுதிசெய்வதற்காக போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். பொது இடங்களில் பெண்கள் யாரேனும் தங்கள் தலைமுடியை அதிகளவில் வெளிகாட்டினால், அவர்களை தடுத்து நிறுத்தும் அதிகாரம் அதிகாரிகளுக்கு உண்டு. மேலும், பெண்களின் ஆடைகள் குறுகியதாக இருந்தாலோ அல்லது இறுக்கமாக இருந்தாலோ அல்லது அதிகமாக சிகை அலங்காரம் செய்திருந்தாலோ விதிகளை மீறுவதற்கான தண்டனைகளில் அபராதம், சிறை போன்றவை அவர்களுக்கு விதிக்கப்படுகிறது.

மேலும், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு 2014-ம் ஆண்டில், ஈரானிய பெண்கள் ‘மை ஸ்டெல்தி ஃப்ரீடம்’ என்ற ஆன்லைன் எதிர்ப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஹிஜாப் சட்டங்களை பகிரங்கமாக எதிர்க்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.