தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘சாகுந்தலம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி புதிய மோஷன் போஸ்டருடன் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

கடந்த 2015-ம் ஆண்டு அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் வெளியான ‘ருத்ரமாதேவி’ வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, தெலுங்கு இயக்குநர் குணசேகர் இயக்கியுள்ள திரைப்படம் ‘சாகுந்தலம்’. காளிதாசன் எழுதிய புராணக் கதையான சகுந்தலையின் காதல் கதையை மையமாகக் கொண்டு ‘சாகுந்தலம்’ படம் உருவாகியுள்ளது. சகுந்தலை வேடத்தில் சமந்தாவும், மன்னன் துஷ்யந்தனாக தேவ் மோகனும் நடித்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடைப்பட்ட காதல் கதையைத் தான் படக்குழுவினர் பீரியட் படமாக எடுத்துள்ளனர்.

அண்மையில் வெளியான இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், வனம் ஒன்றில் மான்கள் மற்றும் பறவைகள் சூழ வெள்ளை உடையில் சமந்தா அமர்ந்திருந்தார். இந்நிலையில் தற்போது மோஷன் போஸ்டருடன், படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி நவம்பர் 4-ம் தேதி இந்தப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.

அதிதி பாலன், அனன்யா நாகள்ளா, கௌதமி, பிரகாஷ்ராஜ், மோகன் பாபு, கபீர் பேடி, மதுபாலா உட்பட பலர் இதில் நடித்துள்ளனர். மேலும் அல்லு அர்ஜூனின் மகள் அல்லு ஆர்கா இந்தப் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார். சகுந்தலையின் மகனாக இளவரசன் பரதனாக, அல்லு ஆர்கா நடித்துள்ளார்.

இந்தப் படத்திற்கு சாய் மாதவ் வசனங்கள் எழுதியுள்ளார். நீலிமா குணாவும், தில் ராஜுவும் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். மணி சர்மா இசையமைத்துள்ளார். சேகர் வி ஜோசப் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.