திருமலை: ஆந்திராவில் ரோந்து சென்றபோது போலீசாரை கொல்ல டிபன்பாக்ஸ்களில் கண்ணிவெடிகளை மாவோயிஸ்ட்கள் புதைத்து வைத்துள்ளனர். உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டதால் போலீசார் உயிர் தப்பினர். ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மான்யம் மாவட்டம் ஏஜென்சி பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் போலீசார் ஜீப்பில் நேற்று ரோந்து சென்றனர். வலசபொலேறு-வலசபொலிகுடா இடையே சென்றபோது சாலையில் பள்ளம் இருப்பதை கண்ட அவர்கள் அங்கு சென்று பார்த்தனர்.

அங்கு டிபன்பாக்ஸ் போன்று  இருப்பதை கண்டு சந்தேகமடைந்தனர். பள்ளத்தில் சோதனையிட்டபோது 20 கிலோ எடையுள்ள 2 டிபன் பாக்சில்  கண்ணிவெடிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் வந்து கண்ணிவெடிகளை செயலிழக்க வைத்தனர். கண்ணிவெடி கண்டுபிடிக்கப்பட்டதால் இப்பகுதியில் மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் இருக்கலாம் எனவும், போலீசாரை கொல்ல வெடிகள் வைத்திருக்கலாம் என தெரியவந்தது.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் அதிகம் இருந்தது. பின்னர் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கை காரணமாக நடமாட்டம் குறைந்து பழங்குடியின கிராம மக்கள் நிம்மதியாக இருந்து வந்த நிலையில் நேற்று கண்ணிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டதால் அப்பகுதி மக்களிடம் பீதி ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த பாலகொண்டா டிஎஸ்பி ஷ்ரவாணி சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். அப்போது அவர்,  நீலகண்டபுரம் காவல் நிலையத்தில் கண்ணிவெடிகுண்டுகள் செயலிழக்க வைத்துள்ளதால் மக்கள் பீதியடைய தேவையில்லை’ என்றார். அப்போது, இன்ஸ்பெக்டர்கள் திருப்பதிராவ், சத்தியநாராயணா, எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.