புதுடெல்லி: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 2023-ம் ஆண்டு சீசன் போட்டிகள் வழக்கம் போன்று அணியின் சொந்த மைதானம் மற்றும் வெளிமாநில மைதானங்களில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சவுரவ் கங்குலி உறுதி செய்துள்ளார்.

கரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக ஐபிஎல் டி 20 தொடரானது 2020-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் ரசிகர்கள் இல்லாமல் பூட்டிய அரங்கினுள் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டில் தொடரின் முதற்பாதி டெல்லி, அகமதாபாத், மும்பை, சென்னையில் நடத்தப்பட்டது. அதன் பின்னர் கரோனா தொற்று காரணமாக போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து இந்த ஆண்டில் லீக் ஆட்டங்கள் மும்பை, புனேவிலும் பிளே ஆஃப் ஆட்டங்கள் கொல்கத்தாவிலும் இறுதிப் போட்டி அகமதாபாத்திலும் நடத்தப்பட்டது.

இந்நிலையில் 2023-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளை ஒவ்வொரு அணியும் வழக்கமான முறையில் சொந்த மைதானம் மற்றும் வெளிமாநில மைதானம் என்ற அடிப்படையில் விளையாடும் என்பதை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக அவர், ஐபிஎல் போட்டியுடன் தொடர்புடைய மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு தகவல் அனுப்பியுள்ளார்.

இதன் மூலம் ஒவ்வொரு அணியும் தங்களது சொந்த மைதானத்தில் கணிசமான ஆட்டங்களை விளையாடும். அதேவேளையில் மற்ற அணிகளின் மைதானங்களுக்கும் சென்று போட்டிகளில் பங்கேற்கும். இந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தங்களது ஆட்டங்களை விளையாட உள்ளது.

முதன்முறையாக அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் மகளிருக்கான ஐபிஎல் தொடர் நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் கிரிக்கெட் போட்டி டிசம்பர் 26 முதல் ஜனவரி 12-ம் தேதி வரை பெங்களூரு, ராஞ்சி, ராஜ்கோட், இந்தூர், புனே ஆகிய இடங்களில் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.