புதுடில்லி,:காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைமுறைகள் துவங்கியுள்ளன. ”ஒருவருக்கு ஒரு பதவி என்ற கட்சியின் முடிவை அனைவரும் பின்பற்ற வேண்டும்,” என, முன்னாள் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

இதையடுத்து, தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ள மூத்த தலைவர் அசோக் கெலாட், ராஜஸ்தான் முதல்வர் பதவியில் இருந்து விலக உள்ளார். இதற்கிடையே, அசோக் கெலாட், சசி தரூரைத் தொடர்ந்து, தலைவர் பதவிக்கு போட்டியிட பல மூத்த தலைவர்களும் ஆர்வம் தெரிவித்துள்ளனர்.

latest tamil news

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு, அக்., 17ல் தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு முறைப்படியான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. நாளை முதல் 30ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். ஒருவருக்கு மேல் போட்டியிட்டால், அக்., 17ல் தேர்தல் நடத்தி, 19ல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில கோரிக்கைகள்

தலைவர் பதவியை முன்னாள் தலைவர் ராகுல் ஏற்க வேண்டும் என, பல மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், இதை அவர் நிராகரித்துள்ளார். ‘நானோ, தன் குடும்பத்தாரோ, தலைவர் பதவிக்கு போட்டியிட மாட்டோம்’ என அவர் பலமுறை கூறியுள்ளார்.தற்போது ராகுல் போட்டியிடாத நிலையில், மூத்த தலைவரான அசோக் கெலாட்டை தலைவர் பதவியில் நியமிக்க, கட்சியில் பலரும் ஆதரவு தெரிவித்து இருந்தனர். இதற்கிடையே, அதிருப்தியாளர் குழுவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர், இந்த தேர்தலில் போட்டியிட ஆர்வம் தெரிவித்தார். இது தொடர்பாக, கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாவையும் அவர் சந்தித்து பேசினார்.

இதற்கு சோனியா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.’பாரத் ஜோடோ’ எனப்படும் பாரத ஒற்றுமை பாதயாத்திரையை ராகுல் மேற்கொண்டுள்ளார். தற்போது கேரளாவில் உள்ள ராகுல் நேற்று கூறியதாவது:தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளோருக்கு சில கோரிக்கைகளை வைக்கிறேன். இந்தப் பதவியானது, ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது; நம் நாட்டின் பெருமையை உணர்த்தக் கூடியது.இது வெறும் கட்சிப் பதவியல்ல; நம் கொள்கை களை கடைப்பிடிக்க ஊக்கப்படுத்தும் பதவி.ராஜஸ்தானின் உதய்பூரில் நடந்த கட்சியின் சிந்தனையாளர் கூட்டத்தில், ஒருவருக்கு ஒரு பதவி என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது முழுமையாக கடைப்பிடிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

கட்சித் தலைவர் பதவி மற்றும் ராஜஸ்தான் முதல்வர் பதவியை சேர்த்து கவனிக்க, அசோக் கெலாட் விருப்பம் தெரிவித்துஇருந்தார். இந்நிலையில், ராகுலை சந்திக்க நேற்று கேரளா வந்த அசோக் கெலாட் கூறியதாவது:ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளை கவனிப்பதில் பிரச்னையில்லை. அதே நேரத்தில் கட்சித் தலைவர் பதவி என்பது, தேசிய அளவிலான பொறுப்பு. அந்தப் பொறுப்பை சிறப்பாகச் செய்வதற்கு, ஒரு பதவியில் இருப்பதே சிறந்ததாக இருக்கும். தலைவர் பதவியை ஏற்கும்படி ராகுலிடம் நேரில் வலியுறுத்த உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

பலர் ஆர்வம்

தலைவர் பதவிக்கு சோனியா, ராகுல் போட்டியிடப் போவதில்லை என்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து, 22 ஆண்டுகளுக்குப் பின், தலைவர் பதவிக்கு தேர்தல் நடக்க உள்ளது. இதில், 9,000க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் ஓட்டளித்து, புதிய தலைவரை தேர்ந்தெடுக்க உள்ளனர்.தலைவர் பதவிக்கு போட்டியிட, மத்திய பிரதேச முன்னாள் முதல்வர்களான திக்விஜய் சிங், கமல்நாத், மூத்த தலைவர் மணீஷ் திவாரி என பலர் ஆர்வம் காட்டியுள்ளனர்.

கெலாட்டுக்கு ஆதரவு?

கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் நடுநிலை வகிக்கப் போவதாக சோனியாவும், ராகுலும் கூறி வருகின்றனர்; அதிகாரப்பூர்வமாக எவரையும் வேட்பாளராக அறிவிக்கப் போவதில்லை என்றும் கூறியிருந்தனர்.தற்போதைய நிலையில் அசோக் கெலாட், சசி தரூர் ஆகியோர் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் கெலாட்டுக்கு, சோனியா குடும்பத்தின் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது.கட்சியின் செய்தித் தொடர்பாளர் கவுரவ் வல்லப், சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவுகள் இதை உணர்த்துவதாக உள்ளன. சசி தரூரை விமர்சித்து, தன் பதிவில் குறிப்பிட்டுள்ள அவர், அசோக் கெலாட்டை பாராட்டிஉள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.