சென்னை: போலீஸ் உடை அணிந்து வந்து சினிமா தியேட்டரில் ஆய்வு செய்த கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் ஸ்ரீவெங்கடேஸ்வரா திரையரங்கம் உள்ளது. இங்கு, போலீஸ் உடை அணிந்து வந்த ஒரு வாலிபர், நேராக திரையரங்கு உள்ளே சென்றுள்ளார்.  இதுகுறித்து தியேட்டர் ஊழியர்கள் கேட்ட போது, போலீஸ் கமிஷனர் ஆபீசில் இருந்து வருவதாகவும், மாணவர்கள் வகுப்புக்கு மட்டம் போட்டுவிட்டு, இந்த தியேட்டரில் படம் பார்ப்பதாக கமிஷனருக்கு வந்த தகவலையடுத்து ஆய்வு செய்ய வந்துள்ளேன், என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அந்த வாலிபர், தியேட்டருக்குள் சென்று மாணவர்கள் இருக்கிறார்களா என நோட்டமிட்டவாறு சென்றுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்திற்கு எஸ்பி அலுவலகம் தானே இருக்கிறது. இவர் கமிஷனர் ஆபீஸ் என்று சொல்கிறாரே என்ற  சந்தேகம் தியேட்டர் ஊழியர்களிடம் ஏற்படவே, உடனடியாக மணவாளநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அந்தோனி ஸ்டாலின் தலைமையிலான போலீசார் ஸ்ரீவெங்கடேஸ்வரா தியேட்டருக்கு விரைந்து வந்து அந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை பகுதியை சேர்ந்த மணி மகன் சிவப்பிரகாசம் (22) என்பது, இவர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் ரேடியாலஜி 4ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. மேலும், விசாரணையில், தியேட்டர் ஊழியர்களை மிரட்டி, பணம் பறிக்கும் நோக்கில், போலீஸ் உடையணிந்து சோதனை நடத்தியதும் தெரியவந்தது. இதனையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.