மகாராஷ்டிராவின் அமராவதி தொகுதி எம்.பி-யும், நடிகையுமான நவ்ஜீத் ராணா மக்களவைத் தேர்தலில் போட்டியிடும்போது தான் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்று கூறி இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் ரிசர்வ் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் நவ்நீத் ராணாவின் தந்தை பள்ளி கல்வி சான்றிதழில் மோசடி செய்து அதனைக் காட்டி எஸ்.சி பிரிவைச் சேர்ந்தவர் என்று சாதிச் சான்றிதழ் வாங்கிவிட்டதாகக் கூறி மும்பை போலீஸில் ராணாவுக்கு எதிராகப் புகார் செய்யப்பட்டது. இதில் ராணாவும் அவர் தந்தை ஹர்பஜன் சிங்கும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் இரண்டு பேர்மீதும் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கின்றனர். இதில் குற்றச்சாட்டுகளைப் பதிவுசெய்ய நேரில் ஆஜராகும்படி இருவருக்கும் உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு கடந்த 6-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது அன்றைய தினம் கோர்ட்டில் ஆஜராக விலக்கு அளிக்கும்படி ராணா தரப்பில் கேட்கப்பட்டது.

கோர்ட் அனுமதி வழங்கியது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மீண்டும் ஆஜராகவில்லை. ராணா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இரண்டு மனுக்களை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அதில் ஏற்கெனவே இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் வழக்கு விசாரணையை ஒத்தி வைக்கவேண்டும் என்றும், ராணா ஆஜராக விலக்கு அளிக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்த நீதிமன்றம், ராணாவுக்கும் அவர் தந்தைக்கும் கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. மீண்டும் வழக்கு வரும் 4-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. கடந்த மாதம் 22-ம் தேதிதான் இருவருக்கும் இதே நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது. உடனே 25-ம் தேதி நேரில் ஆஜராகி கைது வாரண்ட்டை ரத்துசெய்ய வைத்தனர்.




ராணாவின் சாதிச் சான்றிதழ் தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று விசாரணையில் இருந்தது. விசாரணையில் ராணாவின் சான்றிதழ் மோசடியாக பெறப்பட்டது என்பதை உறுதிசெய்து சான்றிதழை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. ஆனால் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைக்கு தடை விதிக்கவில்லை. நவ்நீத் ராணா தமிழில் அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் நடத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.