பல்லாவரம்: தனியாக வசித்து வந்த மூதாட்டியை சரமாரியாக வெட்டி நகைகளை பறித்துச் சென்ற கொள்ளையர்களை போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர். பல்லாவரம் அடுத்த மலைமேடு, மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் லட்சுமி (76). தனியாக வசித்து வருகிறார். மேலும், அப்பகுதியில் வட்டிக்கு பணம் கொடுத்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வீட்டில் தூங்கினார். நேற்று காலை வெகுநேரம் ஆகியும், அவரது வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு, தலை மற்றும் உடலில் பல இடங்களில் வெட்டுக் காயங்களுடன் லட்சுமி ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார்.

அவர் அணிந்திருந்த கம்மல், மோதிரம் உள்ளிட்ட 3 சவரன் நகைகள் திருடு போனது தெரிய வந்தது. உடனடியாக அவரை மீட்ட பொதுமக்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுபற்றி அறிந்த பல்லாவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, லட்சுமியின் வீட்டை ஆய்வு செய்தனர். மேலும், அங்கு பதிவான கொள்ளையர்களின் கைரேகை பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர். நகைக்காக மூதாட்டி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.