மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே அதிகாலையில் கணவன், மனைவி, மகளை கட்டி போட்டு 15 பவுன், 2 கிலோ வெள்ளி மற்றும் பணத்தை கொள்ளையடித்த முகமூடி ஆசாமிகள் 10 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள மருவூர் அவின்யூவில் வசித்து வருபவர் ஹரிஹரன். மின்வாரிய துறையில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் நேற்றிரவு வழக்கம் போல தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டு விட்டு தூங்கினார். இன்று அதிகாலையில் கதவு தட்டும் சத்தம் கேட்டது. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த ஹரிஹரன், படுக்கையில் இருந்து எழுந்து வந்து கதவை திறந்தார். அந்த நேரத்தில் திபுதிபுவென முகமூடி அணிந்திருந்த 7 பேர் கும்பல், வீட்டுக்குள் புகுந்தது. 3 பேர் ஜன்னல் பக்கத்தில் நின்றிருந்தனர். அவர்களை பார்த்ததும் ஹரிஹரன் அதிர்ச்சியடைந்தார். சத்தம் கேட்டு படுக்கையில் இருந்த அவரது மனைவி, மகள் ஆகியோர் எழுந்து வந்தனர். அனைவரது செல்போன்களையும் பறித்து சுவிட்ச் ஆப் செய்தனர். பின்னர், ஹரிஹரன், அவரது மனைவி, மகன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, ‘சத்தம் போட்டால் குத்தி விடுவோம்’ என கூறி 3 பேரையும் கயிற்றால் கட்டினர்.

பின்னர் பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.80 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து கொண்டு தப்பி ஓடினர். இதையடுத்து, அவர்கள், ஒருவருக்கொருவர் கத்தியால் கயிற்றை அறுத்து கட்டுகளை அவிழ்ந்தனர். பின்னர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு அச்சிறுப்பாக்கம் போலீசார் விரைந்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் சென்று விட்டு நின்றது. போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், கொள்ளையர்களின் உருவங்கள் பதிவாகி இருக்கிறதா என பார்த்தனர். சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.