மதுரை: மதுரையில் கல்லூரி மாணவரை கத்தி முனையில் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை தல்லாகுளம் பகுதி தனியார் விடுதியில் இருந்த கல்லூரி மாணவரை ஒரு கும்பல் கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, மர்ம கும்பல் மாணவரை கத்தி முனையில் கடத்துவது பதிவாகி இருந்தது. தனிப்படை போலீசார் தேடியதில் கடத்தல் கும்பல் அழகர்கோயில் சாலையில் பதுங்கி இருப்பது தெரியவே அங்கு சென்று அலங்காநல்லூர் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த அருணன் (25) என்ற கல்லூரி மாணவரை மீட்டனர்.

விசாரணையில், அருணன் கடந்த ஆண்டு கோவையில் உள்ள கல்லூரியில் படித்தபோது, கிரிப்டோ கரன்சி வணிகம் பற்றி தெரிய வந்து ரூ.40 ஆயிரம் முதலீடு செய்ததால், வாரம் ரூ.2000 வட்டி கிடைத்துள்ளது. நண்பர்கள் சிலரிடம் தெரிவிக்க பலர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். இந்நிலையில் அவர் மதுரையில் உள்ள கல்லூரியில் சேர்ந்து 2ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இதற்கிடையே கிரிப்டோ கரன்சி நிறுவனத்தை மூடி விட்டனர். இவர் சொன்னதால் தான் கிரிப்டோ கரன்சியில் பலர் ரூ.16 லட்சம் வரை முதலீடு செய்துள்ளனர். அவர்கள் அருணனை கடத்தி செல்போனை பறித்துள்ளனர். தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிந்து, கடத்தலில் ஈடுபட்ட அரவிந்த்குமார் (23), ரிஷிகுமார் (23), கார்த்திகேயன் (24) ஆகியோரை கைது செய்தனர். தப்பிய 2 பேரை தேடி வருகின்றனர்.    

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *