மாஸ்கோ: போர்களுக்கான காலம் முடிந்துவிட்டது என்று ரஷ்ய அதிபர் புதினுக்கு அறிவுறுத்தல்கள் ஒருபுறம் வரும் சூழலில்தான், அவர் தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில் “எங்கள் தேசத்தின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு ஏதேனும் பங்கம் வந்தால் நாங்கள் எங்கள் மக்களைக் காக்க எல்லா வழிகளையும் கடைபிடிப்போம். ரஷ்யாவிடம் நிறைய ஆயுதங்கள் இருக்கின்றன. இது வெறும் உளறல்கள் அல்ல. மேற்கு உலகம் ரஷ்யாவை சிதைக்க நினைக்கிறது. அதனாலேயே நாங்கள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவாகப் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றது. ஆனால் அவ்வாறாக அறிக்கைகள் விடுவோருக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எங்களை அதையும் தாண்டி அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் இருக்கின்றன” என்று கூறியுள்ளார்.

இது குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர், “3 லட்சம் வீரர்களை போரில் ஈடுபடுத்தவுள்ளோம். ஏற்கெனவே ராணுவ வீரர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களையும் போரில் ஈடுபடுத்துவோம்” என்று கூறியுள்ளார்.

பிரிட்டன் கவலை: ரஷ்ய அதிபர் புதினின் பேச்சு குறித்து பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் கில்லியன் கேகன், “இதை நாம் அவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ரஷ்ய அதிபர் தன் மீதே கட்டுப்பாடற்றவராக இருக்கிறார். அதனால் அவர் பேசுவதை அசட்டை செய்ய முடியாது” என்று கூறியுள்ளார்.

புதினின் தொலைக்காட்சி உரை ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகளால் ரஷ்யாவின் நாணயம் ரூபிளின் மதிப்பு குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையும் அதிகரித்துள்ளது. ஏற்கெனவே உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் காரணமாக உலகம் முழுவதும் எண்ணெய் விலையும் உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தது. இப்போது டோனட்ஸ்க் பகுதியில் 60 சதவீதத்தையும், லுஹான்ஸ்க் பகுதியை முழுமையாகவும் ரஷ்யா தனது கட்டிற்குள் வைத்துள்ளது. 8 மாதங்களாக ரஷ்யா – உக்ரைன் போர் நடந்து கொண்டே இருக்கிறது. இந்தப் போர் நீடித்தால் உணவுப் பஞ்சம் ஏற்படும் என்று ஐ.நா. சபை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் அண்மை நாட்களாக பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் பேசி வருகின்றனர். அவர்களில் பலரும் ரஷ்யா சட்டவிரோத படையெடுப்பைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில்தான், புதினின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.