தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா சமீபத்தில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்  இந்து மதம் குறித்துப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியது. இந்த வீடியோவை பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, “தமிழ்நாட்டின் அரசியல் பேச்சின் அவல நிலை. திமுக எம்.பி மீண்டும் ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை உமிழ்ந்து, மற்ற சமூகத்தினரை திருப்திப்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளார். தமிழகம் தங்களுக்குச் சொந்தமானது என்று நினைக்கும் இந்த அரசியல் தலைவர்களின் மனநிலை மிகவும் துரதிருஷ்டவசமானது” என்று கருத்து பதிவிட்டிருந்தார். 

கடையடைப்பு

கடையடைப்பு

இந்தசூழலில், இந்து மதம் குறித்து ஆ.ராசா பேசியதற்கு பா.ஜ.க மற்றும் இந்து முன்னனியினர் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், கடந்த மூன்று நாட்களாகக் கோவை, மதுரை, நாமக்கல், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் போராட்டத்தை நடத்தினர். இதேபோல், பா.ஜ.க-வினரும், இந்து முன்னணியினரும் ஆ.ராசா மீது வழக்கு பதிவுசெய்து, அவரைக் கைதுசெய்ய வேண்டும் எனக் கூறி போலீஸில் புகாரும் அளித்துள்ளனர். ஆ.ராசாவை கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தாலும் நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற முழு கடையடைப்பு போராட்டம் கவனிக்கத்தக்க ஒன்றாக மாறியுள்ளது.

போராட்டம்

போராட்டம்

ஏனென்றால், ஆ.ராசா நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இதனால், நீலகிரியில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்த இந்து முன்னணி முழு வீச்சில் இறங்கியது. கடையடைப்பு போராட்டத்தில் கலந்துகொள்ளவும் வணிகர்களுக்கு அழைப்பு விடுத்தது. ஆனால், சில வணிகர்கள் கடைகளை மூட முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடைகளைக் கண்டிப்பாக மூட வேண்டும் என்றுகூறி இந்து முன்னணியானர் வற்புறுத்தியதாகத் கூறப்பட்டது. அந்தவகையில், கடைகளை அடைக்க வற்புறுத்திய இந்து முன்னணியைச் சேர்ந்த 18 பேரை போலீஸார் கைதுசெய்தனர். சத்தியமங்கலத்தில் 11 பேரும் புன்செய் புளியம்பட்டியில் 8 பேரும் கைது செய்யப்பட்டார்கள். 

கடையடைப்பு

கடையடைப்பு

இதைத்தொடர்ந்து, ஊட்டி, குன்னூர், கூடலூர், மஞ்சூர், கோத்தகிரி, பந்தலூர் பகுதிகளில் 50% கடைகள் அடைக்கப்படன. மற்ற இடங்களில் கடைகள் வழக்கம் போல இயங்கின. ஒருசில பகுதிகளில் தனியார் மினி பேருந்துகள்  இயக்கப்படவில்லை. நீலகிரி தொகுதியில் உள்ள ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர், புன்செய்புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் டீக்கடை, வணிக நிறுவனங்கள், மளிகைக்கடை உள்ளிட்ட பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டது. சத்தியமங்கலம் பேருந்து நிலையப் பகுதியில் திறந்திருந்த பேக்கரியின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. நீலகிரியில் இந்து முன்னனியினர் நடத்திய கடையடைப்பு போராட்டம் வணிகர்களின் விருப்பத்தை மீறி நடந்ததாக பல்வேறு தரப்பினர் கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார்கள். 

காடேஸ்வரா சுப்பிரமணியம்

காடேஸ்வரா சுப்பிரமணியம்

இதுகுறித்து, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், “எங்களின் அழைப்பை ஏற்று வியாபாரிகளே முன்வந்து முழு கடையடைப்பு போராட்டத்தில் கலந்துகொண்டார்கள். நாங்கள் யாரையும் வற்புத்தவில்லை. வியாபாரிகள் யாருமே இதுவரையில் இதுபோன்ற புகாரை சொல்லவில்லை. ஆனால், தி.மு.கவை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் அனைத்து பகுதிகளுக்கும் சென்று யாரும் கடைகளை  அடைக்கக்கூடாது என்றனர். ஊட்டி மார்கெட் பகுதிக்கு சென்று கடைகளை அடைத்தால் லைசென்ஸ் ரத்து செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளார்கள். ஆ.ராசா நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். மன்னிப்பு கேட்டால் மட்டும் அவர் சொன்ன வார்த்தைகள் மறைந்துவிடுமா என்ன? ஆ.ராசா எம்.பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் நாடாளுமன்ற சபாநாயகர் அவர்மேல் நடவடிக்கை எடுத்து எம்.பி பதவியை பறிக்க வேண்டும். இது தான் எங்களுடைய கோரிக்கை.

நீலகிரியில் கைது செய்யப்பட்ட 18 பேரும் பாஜக மற்றும் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் தான். எந்த கட்சி போராட்டம் நடத்தினாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சிலரை கைது செய்வது வழக்கம் தான். அதுபோல தான் இந்த கைதும் நடந்துள்ளது. இந்த அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்றே ஆ.ராசா இதுபோல் பேசுகிறார்” என்றார்.  

ரவிக்குமார்

ரவிக்குமார்

நீலகிரி மாவட்ட திமுக துணைச்செயலாளர் ரவிக்குமார், “நீலகிரி மாவட்டத்தில் தன்னெழுச்சியாக வணிகர்கள் கடைகளை மூடினார்கள் என்று சொல்வது தவறு. இந்து முன்னனியை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு கடைக்கும் சென்று கடைகளை மூட வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். கடைகளை மூட வேண்டும் என்று சொல்வதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கும் போது மூடக்கூடாது என்று சொல்வதற்கும் எங்களுக்கு உரிமை இருக்கிறது. அதனால், கடைகளை மூட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினோம். இதில் கட்சிக்காரர்களாக நாங்கள் செயல்படவில்லை. வியாபாரிகளாகத் தான் செயல்பட்டு கருத்து கூறினோம்.  லைசென்ஸை ரத்து செய்துவிடுவோம் என்று நாங்கள் மிரட்டவில்லை. லைசென்ஸ் ரத்து செய்ய நாங்கள் யார்?” என்றார். 

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: