அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பணிகளின் டெண்டர்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையில் அறப்போர் இயக்கம் மற்றும் திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி உயர் நீதிமன்றத்தில் 2018-ம் ஆண்டு வழக்குகள் தொடரப்பட்டன. ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர், சென்னை மற்றும் கோவையில் தலா ஒரு வழக்கு என 2021, 2022-ம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டன. அந்த இரு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி வேலுமணி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர்நாத் பண்டாரி அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தாக்கல் செய்துள்ள மனுவை தனி நீதிபதிதான் விசாரிக்க வேண்டும் எனவும், வருமான வரித்துறைக்காக ஆஜராகும் மத்திய அரசு வழக்கறிஞராக இருக்கக்கூடிய ராஜு என்பவர் ஆஜராகக் கூடாது என்றும் அரசுத் தரப்பில் வாதிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வே விசாரிக்கலாம். மத்திய அரசு வழக்கறிஞான ராஜுவே ஆஜராகலாம் என உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்திருந்தனர். இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க அரசுத் தரப்பில் நேற்று முன்தினம் (19-09-2022) முறையீடு செய்யப்பட்டது.

நீதிமன்றம்

இந்நிலையில், இந்த வழக்கு, பொறுப்புத் தலைமை நீதிபதி எம்.துரைசாமி, நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (20-09-2022) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி வழக்கை நடத்த தயாராக உள்ளதாக குறிப்பிட்டார். எஸ்.பி். வேலுமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஐயப்பராஜ், டெல்லியிருந்து மூத்த வழக்கறிஞர் இந்த வழக்கில் ஆஜராக இருப்பதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், தாங்கள் அளித்த புகாரின் அடிப்படையிலேயே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்கான எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வுக்கு மாற்றுவதாக பொறுப்பு தலைமை நீதிபதி தெரிவித்தார். அப்போது வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜு, முதல் அமர்வு அல்லது இரண்டாவது அமர்வு விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று குறிப்பிட்டார். இந்த வழக்கை தனி நீதிபதி முன் பட்டியலிட மறுத்த நீதிபதிகள், எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்கான நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டனர். அதன்படி நீதிபதிகள் பிரகாஷ், டீக்காராமன் அமர்வு தான் இனி எஸ்.பி.வேலுமணி வழக்குகளை விசாரிக்க இருக்கிறது.

இது தொடர்பாக ஓ.பி.எஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ், “இப்போதுதான் வழக்கு முறையான வழிக்கு வந்திருக்கிறது. முன்னாள் சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்நாள் சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே தனி நீதிமன்றம் இந்தியா முழுவதும் இருக்கிறது. அதில் தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள நீதிமன்றத்தில்தான் பாலகிருஷ்ண ரெட்டி அமைச்சராக இருக்கும் போது செய்த முறைகேட்டுக்காகத் தண்டனைக்கு உள்ளாகி பதவி ராஜினாமா செய்தார். அவருக்கான தண்டனை 15 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்தது என்பது கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த வழக்கு இன்னும் உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. எனவே அரசியல்வாதிகள் வழக்கில் இதுவரை அந்த நீதிமன்றம் யாருக்கும் விடுதலை கொடுக்கவில்லை.

கோவை செல்வராஜ்

வேலுமணி மீதான ஊழல் புகார் நீதிமன்றத்திற்குப் போனதால் வெளியே வந்திருக்கிறது. அதே நேரத்தில் ஏழு முன்னாள் அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் மீதும் நீதிமன்ற நடவடிக்கை இருக்கும் போது அந்த வழக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு வரும். இவர்கள் மீது கோடிக்கணக்கான பணம் குறித்து புகார் வந்திருப்பதால் இது சாதாரண குற்றமில்லை. மனசாட்சிப்படி அதிலிருந்து வெளியே வர வேண்டுமென்றால் தவறு செய்யாதவர்கள் என்கிற நிலையை ஏற்படுத்திதான் வர வேண்டும். ஆனால், அப்படி நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கணும். ஒருவேளை வேலுமணி நிரூபிக்காத பட்சத்தில் இயற்கையாகவே அவருக்கான தண்டனை உறுதி. ஏனென்றால் இங்கு யார் தவறு செய்தாலும் தண்டனைத்தான்” என்றார்.

பாபு முருகவேல்

“எந்த நீதிமன்றம் போனாலும் வெற்றிபெறப் போகிறோம். எனவே இதில் சாதக பாதகம் ஒன்றுமில்லை” என்கிறார் அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல். மேலும் தொடர்ந்தவர், “எம்.பி., எம்.எல்.ஏ வழக்கு என்பதால் முதல் அமர்வு விசாரிக்க  முடியாது. எம்.பி., எம்.எல்.ஏ-க்குரிய ஸ்பெஷல் பெஞ்சில் இப்போது மாற்றப்பட்டிருக்கிறது. இந்த பெஞ்சில் விசாரித்தாலும் அதே பாயிண்ட்தான், ஃபர்ஸ்ட் பெஞ்சில் விசாரித்தாலும் அதே பாயிண்ட்தான். பெஞ்ச் தான் மாறி இருக்கிறது. வழக்கு மாறவில்லை. எனவே இதில் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்தளவு மெரிட் இந்த வழக்கில் எங்களுக்கு சாதகமாக இருக்கிறது” என்கிறார்.  

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *