சென்னை: சென்னையில் ஒரு நாள் சிறப்பு சோதனையில் போதைப்பொருட்கள் விற்பனை செய்ததாக 96 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கை மற்றும் புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு எதிராகவும், குட்கா புகையிலை பொருட்களுக்கு எதிராகவும், ஒரு நாள் சிறப்பு தணிக்கை நடந்தது.

இந்த சோதனையில், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் வழக்கில் சம்பந்தப்பட்ட 472 குற்றவாளிகள் கண்காணித்து, மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது. இதில் 86 குற்றவாளிகள் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், நீதிமன்ற பிடி ஆணை பிறப்பிக்கப்பட்ட ஒரு குற்றவாளி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 31 குற்றவாளிகள் திருந்தி வாழ்வதற்காக அவர்களிடமிருந்து நன்னடத்தை பிணை ஆவணம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதுதவிர நேற்று முன்தினம் பள்ளி, கல்லூரி உள்பட கல்வி நிறுவனங்களுக்கு அருகில் மற்றும் இதர இடங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனைகள் மேற்கொண்டு, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மற்றும் குட்கா புகையிலை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இச்சோதனையில், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக, 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 9.25 கிலோ கஞ்சா, 105 உடல்வலி நிவாரண மாத்திரைகள், 1 இருசக்கர வாகனம் மற்றும் பணம் ரூ.9,130 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

* கமிஷனர் எச்சரிக்கை
 தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக, 83 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 84 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 28.67 கிலோ குட்கா, மாவா புகையிலை பொருட்கள், 283 சிகரெட்டுகள் மற்றும் பணம் ரூ.920 பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சென்னையில் போதைப்பொருட்கள் மற்றும் குட்கா புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, இதுபோன்ற சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்படும். குற்ற பின்னணி நபர்கள் மற்றும் போதை, குட்கா பொருட்கள் கடத்தி வருபவர்கள், பதுக்கி வைப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.