சாமானியர்கள் முதல் பிரபலங்கள் வரையில் பக்தர்கள் கூட்டம் திமிலோகப்பட, தீர்த்தமாடுதல், வழிபாடுகள் என களைகட்டியுள்ளது ராமேஸ்வரம். குறிப்பாக சமீப நாள்களில் ஓ.பன்னீர் செல்வம், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி என அரசியல் பிரபலங்களும் ராமேஸ்வரத்துக்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். அப்படியென்ன சிறப்பு ராமேஸ்வரத்தில். தெரிந்து கொள்வோமா?

ராமேஸ்வரம் கோயில்

தொடங்கிவிட்டது மஹாளய புண்ய காலம்!

மனிதர்கள் ஒவ்வொருக்கும் உரிய கடமைகளில் ஒன்று முன்னோர் வழிபாடு. பித்ருக்களாகிய முன்னோரை வணங்கி வழிபடுவதால் குடும்பம் சுபிட்சம் பெறும்; சந்ததியின் எதிர்காலம் சிறக்கும் என்பது நம்பிக்கை. அவ்வகையில் ஆடி மற்றும் தை அமாவாசை, மஹாளய புண்ணிய காலம் முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த நாள்களாகும்.

அவ்வகையில் நிகழும் புரட்டாசி மாதத்தின் சிறப்புகளில் ஒன்றாகத் திகழ்கிறது மஹாளய புண்ணிய காலம். இது சூரியன் கன்னியா ராசியில் இருக்கக்கூடிய காலம் ஆகும் (தேய்பிறை பிரதமை முதல் வளர்பிறை பிரதமை வரையில் 16 நாள்கள்). இந்த வருடம் கடந்த செப்டம்பர் 11 முதல் மஹாளய புண்ணிய காலம் தொடங்கியது. வரும் செப்டம்பர் 25 மஹாளயபட்ச அமாவாசை திருநாள்.

இந்த நாள்களில் செய்யப்படும் ஹோமம், வழிபாடுகள், வழங்கப்படும் அன்னம் ஆகியவை உயர்ந்த பலன்களைத் தரும் என்று சாஸ்திரம் போற்றுகிறது. முக்கியமாக நம் முன்னோர் இந்தக் காலத்தில் அன்னத்தையும் நீரையும் விரும்புகின்றனர். ஆகவே, இந்தப் புண்ணிய காலத்தில் அவர்களைத் திருப்திப்படுத்துவது மிகவும் உயர்ந்த செயலாகும். மஹாளய அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் செய்து வழிபடுவது மிகவும் விசேஷமாகும். இதனால் பித்ரு தோஷம் நீங்கும். முன்னோரின் ஆசியால் நம் குடும்பம் செழிக்கும்.

மட்டுமன்றி இந்த மஹாளய புண்ணிய காலத்தில் புண்ணிய நதிகள், கடற்கரை க்ஷேத்திரங்களுக்குச் சென்று நீராடுவதும், முன்னோருக்கான வழிபாடுகளைச் செய்வதும் உயர்ந்த பலன்களை அளிக்கும்.

ராமேஸ்வரம் கடற்கரை

ராமேஸ்வரத்தில் என்ன சிறப்பு?

இந்தியாவில் உள்ள பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் பித்ரு வழிபாட்டுக்கு உகந்த தலங்களில் ஒன்று. ராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க வேண்டி, ராமபிரான் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட திருத்தலம். இந்தத் தலத்தில் உள்ள தீர்த்தங்களில் அக்னி தீர்த்தம், பித்ரு தோஷத்தைப் போக்கும் ஆற்றல் கொண்டது. இந்த அக்னி தீர்த்தத்துக்குப் பெயர் வந்தது பற்றி ஒரு புராண வரலாறு சொல்லப்படுகிறது.

ராமபிரானின் உத்தரவின்படி சீதாபிராட்டி அக்னி பிரவேசம் செய்தபோது, பிராட்டியை தீண்டிய தோஷம் நீங்க அக்னி பகவான் இங்குள்ள கடலில் நீராடி தோஷம் நீங்கப்பெற்றதால், இந்தத் தீர்த்தத்துக்கு அக்னி தீர்த்தம் என்ற பெயர் ஏற்பட்டது. இன்னொரு காரணமும் சொல்வர். அதாவது, பிராட்டியின் கற்பின் வெப்பம் அக்னிபகவானைத் தகித்ததாகவும், அக்னி பகவான் இங்குள்ள கடலில் நீராடி வெம்மையைப் போக்கிக் கொண்டதாகவும் சொல்கிறார்கள்.

ராமேஸ்வரம் தீவின் தென் பகுதியில் உள்ள தனுஷ்கோடியின் கிழக்குக் கடற்கரைப் பகுதியே அக்னித் தீர்த்தமாக புராணங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது. பிற்காலத்தில் தனுஷ்கோடி கடல் சீற்றத்துக்கு ஆளாகப்போவதை தமது தீர்க்க தரிசனத்தால் உணர்ந்த ஆதிசங்கரர், அந்த அக்னி தீர்த்தத்தை எடுத்து இப்போது ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தம் உள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்ததாகச் சொல்லப்படுகிறது.

ராமேஸ்வரம் கடலில் பக்தர்கள் புனித நீராடும் காட்சி

அற்புதமான இந்தத் தலத்தில் மஹாளய புண்ணிய காலத்தில் முன்னோர் வழிபாடு செய்வதும் தீர்த்தமாடலும் மிகவும் சிறப்பாகும். தற்போது மஹாளய புண்ணிய காலம் தொடங்கிவிட்டதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரத்துக்கு வந்து அக்னித் தீர்த்தம் உட்பட சகல தீர்த்தங்களிலும் நீராடுகின்றனர். அத்துடன் அருள்மிகு ராமநாத சுவாமியையும் அம்பாள் பர்வதவர்த்தினியையும் வழிபட்டு மகிழ்கின்றனர். மேலும் இத்தலத்துக்கே உரிய சிறப்பாக அக்னி தீர்த்தக் கரையில் முன்னோர் வழிபாடு செய்து பித்ரு தோஷம் நீங்கப் பெறுகின்றனர்!

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.