‘பல்கலைக்கழத்தின் பெயரை மாற்றுவதன் மூலம் என்.டி.ராமாராவின் புகழை அழித்துவிட முடியாது” என நடிகரும், என்.டி.ராமாராவின் பேரனுமான ஜூனியர் என்டிஆர் தெரிவித்துள்ளார்.
ஓய்.எஸ்.ஆர்.ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திரப் பிரதேச அரசு அண்மையில் சட்டபேரவையில் சட்டமுன்வடிவு ஒன்றை தாக்கல் செய்தது. அதன்படி, ‘என்டிஆர் யூனிவர்சிட்டி ஆஃப் ஹெல்த் அண்ட் சயின்ஸ்’ (NTR University of Health Sciences) பல்கலைக்கழகத்தின் பெயர் ‘ஒய்எஸ்ஆர் யூனிவர்சிட்டி ஆஃப் ஹெல்த் அன்ட் சையின்ஸ்’ ஆக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகமானது 1986-ம் ஆண்டு தெலுங்கு தேச கட்சியின் நிறுவனரான மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவால் அமைக்கப்பட்டது.
இதற்கு தனது தந்தையான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் பெயரை சூட்டியுள்ள ஜெகன்மோகன் ரெட்டி, ‘ என் தந்தை எம்பிபிஎஸ் படித்தவர். 2004 மற்றும் 2009 காலகட்டத்தில் மாநிலத்தில் முதல்வராக இருந்து சுகாதாரம் தொடர்பான திட்டங்களைத் தொடங்கி மூன்று புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவியவர். இப்படியான தகுதிகொண்டவருக்கு அவருக்கான அங்கீகாரத்தை கொடுக்கக் கூடாதா?’ என கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், இந்தப் பெயர் மாற்றம் தொடர்பாக நடிகரும், என்.டி.ராமாராவின் பேரனுமான ஜூனியர் என்டிஆர், ”என்டிஆர் மற்றும் ஒய்எஸ்ஆர் இருவரும் மிகவும் பிரபலமான தலைவர்கள். ஒருவரின் பெயரை எடுத்துக்கொண்டு, ஒருவரின் பெயரைச் சூட்டிக் கொள்ளும் இத்தகைய மரியாதை ஒய்எஸ்ஆரின் புகழை உயர்த்தாது, அதேசமயம் என்டிஆர் புகழை குறைக்கவும் செய்யாது. பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றுவதன் மூலம் என்டிஆர் சம்பாதித்த புகழையும், தெலுங்கு தேச வரலாற்றில் அவரது அந்தஸ்தையும், தெலுங்கு மக்களின் இதயங்களில் அவரது நினைவையும் அழிக்க முடியாது” என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.