கோவை : நீலகிரி தொகுதி தி.மு.க., – எம்.பி., ராஜாவை கண்டிக்கும் வகையில் பேசியதற்காக, கோவை மாநகர் மாவட்ட பா.ஜ., தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, நேற்று கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ., மற்றும் ஹிந்து இயக்கத்தினர், 400 பேர் கைது செய்யப்பட்டனர்.
விடுதி மாணவியருக்கு தொல்லை: ‘போக்சோ’வில் நால்வர் கைது
பழநி: பழநி, சத்யா நகர் ஆதி திராவிட நல மாணவியர் விடுதி மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த 17 வயது சிறுவன் உட்பட நான்கு பேர், ‘போக்சோ’ சட்டப்பிரிவில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழநி, சத்யா நகர் ஆதி திராவிட நல மாணவியர் விடுதியில் தங்கி இருந்த பள்ளி மாணவியருக்கு, பாலியல் தொல்லை இருப்பதாக குழந்தைகள் பாதுகாப்பு நல துறைக்கு புகார் வந்தது.விசாரணையில் நான்கு மாணவியருடன் அப்பகுதியில் வசித்து வந்த நபர்கள் தொடர்பில் இருந்தது தெரிந்தது. இதையடுத்து பழநி மகளிர் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், பாலியல் தொல்லை கொடுத்த அதே பகுதி கிருபாகரன், 23; ராகுல், 25; பரமானந்தம், 24; மற்றும் 17 வயது கல்லுாரி மாணவரை போலீசார் ‘போக்சோ’வில் கைது செய்தனர்.இதைத் தொடர்ந்து விடுதிக் காப்பாளர் அமுதா, ஊழியர் விஜயா ஆகியோர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர்.
ரூ.8,000 லஞ்சம்: வி.ஏ.ஓ., கைது
திருவாரூர் : நன்னிலம் அருகே, பட்டா மாற்றம் செய்ய, 8,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே, கொல்லுமாங்குடி கிராம நிர்வாக அலுவலராக பணி புரிபவர் தேவதாஸ், 52. இவர், பேரளம் கிராம நிர்வாக அலுவலராகவும் உள்ளார். பேரளத்தைச் சேர்ந்த முகமது தஜ்மில் என்பவரிடம், பட்டா மாறுதல் செய்ய, 8,000 ரூபாயை தேவதாஸ் லஞ்சமாக கேட்டுள்ளார்.லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் அறிவுரைப்படி, பேரளம் கிராம நிர்வாக அலுவலகத்தில், 8,000 ரூபாயை, தேவதாசிடம் தஜ்மில் கொடுத்த போது, மறைந்திருந்த போலீசார் அவரை கைது செய்தனர்.
கலசங்கள் திருடிய 2 பேர் கைது
திட்டக்குடி : கடலுார் மாவட்டம், திட்டக்குடி அருகே, அம்மன் கோவில் கலசங்களை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கலசங்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

திருட்டு நகையுடன் போஸ் ஒருவர் கைது: 126 பவுன் மீட்பு
தூத்துக்குடி : துாத்துக்குடி அருகே திருட்டு நகைகளை அணிந்து போஸ் கொடுத்தவர் போலீஸ் விசாரணையில் 19 திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர் என தெரிய வந்தது. அவர் கைது செய்யப்பட்டு 126 பவுன் மீட்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலத்தை சேர்ந்தவர் கொடிமலர் 40. இனிப்பு கடை நடத்தி வருவதாகவும் திருமண புரோக்கர் எனவும் கூறி வந்தார். இவரது வீட்டில் நடந்த விழாவிற்கான அழைப்பிதழில் பல்வேறு நகைகள், மோதிரங்களை அணிந்து போஸ் கொடுத்திருந்தார். இந்நிலையில் வாகன சோதனையின்போது புது டூவீலரில் வந்த அவரிடம் கட்டிங் பிளேயர், ஸ்குரு டிரைவர் போன்ற உபகரணங்கள் இருந்தன.
விசாரணையில் அவர் 19 திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 126 பவுன் நகைகள் ,டூவீலர், ‘டிவி’ என ரூ. 48 லட்சத்து 42 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கார் மோதி மூன்று பெண்கள் பலி: சாலையோரம் நடந்து சென்றபோது பயங்கரம்
புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் அருகே, சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில், மாமியார் – மருமகள் மற்றும் கல்லுாரி மாணவி உயிரிழந்தனர். கைக்குழந்தை உள்ளிட்ட இருவர் படுகாயமடைந்தனர்.
கடலுார் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டை சேர்ந்தவர் இருதயநாதன் மனைவி கலிசாமேரி, 60.இவர் தன் மருமகளான செபாஸ்டின் மனைவி பிரியா, 30, பிரியாவின் 10 மாத கைக்குழந்தை ஜெரோன் சாய் ஆகியோருடன் பஸ் ஏறுவதற்காக, கடலுார் – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையோரம் நேற்று காலை 10:00 மணிக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
இவர்களுடன், பெரியப்பட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்த, குறிஞ்சிப்பாடி அடுத்த புலியூர் ஆறுமுகம் மகன் தமிழ்செல்வன், 22; ஊமங்கலம் சந்திரசேகர் மகள் தேவதர்ஷினி, 20, ஆகியோரும் சென்று கொண்டிருந்தனர். பெரியப்பட்டு மாதா கோவில் அருகே சென்றபோது, கடலுாரில் இருந்து சிதம்பரம் நோக்கி அதிவேகமாக சென்ற டி.என். 51. பி. டி. 8343 என்ற பதிவெண் கொண்ட ‘ஹூண்டாய் கிரீட்டா’ கார் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது.
இதில் ஐந்து பேரும் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதில் கலிசாமேரி, கல்லுாரி மாணவி தேவதர்ஷினி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்தனர்.பிரியா, புதுச்சேரி ‘ஜிப்மர்’ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். அவரது கைக்குழந்தை ஜெரோம் சாய், ஜிப்மர் மருத்துவமனையிலும், தமிழ்செல்வன், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காரை ஓட்டி வந்த மயிலாடுதுறை மாவட்டம் மூவலுாரைச் சேர்ந்த நாகராஜ், 39, என்பவரை போலீசார் கைது செய்தனர். துாக்க கலக்கத்தில், காரை ஓட்டி வந்து அவர் விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.
தேசிய நிகழ்வுகள்:
பள்ளிக்குள் நுழைந்த முதலை: மாணவர், ஆசிரியர் ஓட்டம்
அலிகார் : உத்தர பிரதேசத்தில், பள்ளிக்குள் முதலை நுழைந்ததையடுத்து மாணவர்கள், ஆசிரியர்கள் அலறியடித்து ஓடினர்.

உ.பி.,யில் அலிகார் மாவட்டத்தில் கங்கை நதி அருகே காசிம்பூர் கிராமம் உள்ளது. இங்குள்ள அரசுப் பள்ளிக்குள், நேற்று முதலை ஒன்று புகுந்தது. இதைப் பார்த்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடினர். பின் கிராமத்தினர் கம்புகளுடன் பள்ளிக்குள் நுழைந்து, முதலையை வகுப்பு அறைக்குள் வைத்து பூட்டினர்.
‘கிராமத்தின் அருகே கங்கை நதி பாய்கிறது. இதனால், மழை வெள்ள நேரத்தில் கிராமத்துக்குள் முதலைகள் புகுந்துவிடுகின்றன. இது குறித்து உள்ளூர் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என, கிராமத்தினர் தெரிவித்தனர்.
இது குறித்து, வன அதிகாரி திவாகர் வசிஷ்ட் கூறுகையில், ”பள்ளிக்குள் புகுந்த முதலை உயிருடன் பிடிக்கப்பட்டது. கிராமப் பஞ்சாயத்து நிர்வாகத்தினரின் உதவியுடன், இப்பகுதியில் நடமாடும் முதலைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,” என்றார்.
பாகனை கொன்ற யானை
சியோனி: மத்திய பிரதேசத்தின், சியோனி மாவட்டத்தில் ராஹிவாடா கிராமம் உள்ளது. இங்கு, பாரத் வாசுதேவ், 55, என்ற யானைப்பாகன், பெண் யானை ஒன்றை வைத்து சம்பாதித்து வந்தார்.சமீபத்தில் இவர் யானையுடன் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது, எதிரே வாழைப் பழங்களை ஏற்றி வந்த லாரியின் டிரைவர், யானைக்கு வாழைப்பழங்களை கொடுத்துள்ளார். ஆனால், அவற்றை பாகன் பெற்றுக்கொண்டு யானைக்கு தரவில்லை. இதில் கடும் கோபம் அடைந்த யானை, பாகனை துதிக்கையால் துாக்கி தரையில் ஓங்கி அடித்து, ஏறி மிதித்தது. இதில், பாகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
ரூ.23,000 கோடி மோசடி: தொழிலதிபர் அதிரடி கைது
புதுடில்லி : குஜராத்தைச் சேர்ந்த ஏ.பி.ஜி., ஷிப்யார்டு நிறுவனம், கப்பல் கட்டும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம், 28 வங்கிகளிடம், 23 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துள்ளதாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா புகார் அளித்துள்ளது.
இதையடுத்து, ஏ.பி.ஜி., ஷிப்யார்டு நிறுவனர் ரிஷி அகர்வால், செயல் இயக்குனர் சந்தானம் முத்துசுவாமி, இயக்குனர் அஸ்வினி குமார் உள்ளிட்டோர் மீது, இந்தாண்டு பிப்ரவரியில் சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து உள்ளது.இந்த வழக்கு தொடர்பாக, புதுடில்லியில் உள்ள சி.பி.ஐ., அலுவலகத்தில் ரிஷி அகர்வாலிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், விசாரணைக்கு அவர் ஒத்துழைக்காததால் கைது செய்யப்பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்