* மற்றொரு காதலனுடன் சிக்கினார்
* உடலை கிணற்றில் வீசியது அம்பலம்

கோவை: கள்ளக்காதல் விவகாரத்தில் அழகு கலை நிபுணர் குத்திக்கொலை செய்யப்பட்டார். அவரது உடல் 12 துண்டுகளாக கூறு போடப்பட்டு கோவையில் பல இடங்களில் வீசப்பட்டது. இது தொடர்பாக கள்ளக் காதலி உட்பட  3 பேர் போலசில் சிக்கினர். கோவை வெள்ளக்கிணறு பிரிவு பகுதியில் ஒரு குப்பைத் தொட்டியில் ஆணின் முழங்கை வரை வெட்டி துண்டிக்கப்பட்டு கிடந்தது. துடியலூர் போலீசார் கைப்பற்றி அந்த கை யாருடையது? என விசாரித்தனர். இந்த நிலையில் அந்த கை, ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியை சேர்ந்த பிரபு (39) என்பவருடையது என தெரியவந்தது. பிரபு கோவை காந்திபுரத்தில் அழகு கலை நிபுணராக பணியாற்றியதோடு, சரவணம்பட்டியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேறிய இவர் மீண்டும் திரும்பவில்லை. முதல் மனைவியை பிரிந்து 2வது திருமணம் செய்தவர். 2வது மனைவி ஈரோட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். கடந்த 13ம் தேதிக்கு பிறகு அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக 2வது மனைவி  கோவை காட்டூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து பிரபுவை தேடி வந்தனர். இந்நிலையில்தான் குப்பை தொட்டியில் கிடந்த கை குறித்து விசாரணை நடந்தது. அப்போது கையில் இருந்த அடையாளம் மற்றும் விரல் ரேகை பதிவை வைத்து போலீசார் அது பிரபுவின் கை என்ற முடிவுக்கு வந்தனர்.

பிரபு வசித்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சி பதிவை பார்த்தபோது அவர் பைக்கில் வீட்டுக்கு வந்து பின்னர் வெளியே சென்றது பதிவாகி இருந்தது. இதுபற்றி தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அப்போது கள்ளக்காதல் தகராறில் பிரபு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கொலையில் தொடர்புடைய கோவையை சேர்ந்த கவிதா (37) மற்றும் அமுல் திவாகர் (34), கார்த்திக் (28) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். கவிதாவின் வீட்டில் பிரபு வாடகைக்கு இருந்தார். அப்போது இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்நேரத்தில் அமுல் திவாகருடனும் கவிதாவுக்கு தொடர்பு ஏற்பட்டது.

இதனால் பிரபுவை கவிதா கண்டுகொள்ளவில்லை. இதனால் கவிதாவுக்கு தொடர்ந்து பிரபு டார்ச்சர் கொடுத்துள்ளார். இதனால் அவரை கொலை செய்ய கவிதாவும், அமுல் திவாகரும் முடிவு செய்துள்ளனர். நண்பர் கார்த்திக்குடன் சேர்ந்து திட்டமிட்டு காந்திநகரில் உள்ள ஒரு வீட்டுக்கு பிரபுவை கவிதா அழைத்துள்ளார். அங்கு வந்த பிரபுவை 3 பேரும் சேர்ந்து கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை12 துண்டுகளாக தனித்தனியாக வெட்டி கூறுபோட்டு மேட்டுப்பாளையம் ஆற்றில் வீச காரில் கொண்டு சென்றுள்ளனர். அங்கு போலீஸ் கெடுபிடி இருந்ததால் மீண்டும் காரில் திரும்பினர்.

வரும் வழியில் குப்பைத்தொட்டியில் கையை வீசிவிட்டு சென்றனர். தலை மற்றும் உடலை துடியலூர் விஏஓ அலுவலகம் பின்புறம் உள்ள கிணற்றிலும், 2 கால்கள் மற்றும் மற்றொரு கையை வேறு கிணற்றிலும் வீசியது தெரியவந்தது. இந்த தகவலின்பேரில் போலீசாரும், கவுண்டம்பாளையம் தீயணைப்பு வீரர்களும் பிரபுவின் உடல் பாகங்களை மீட்டனர். அவை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

கவிதாவை பிரபு வீழ்த்தியது எப்படி?
பிரபு வசித்து வந்த வாடகை வீட்டின் உரிமையாளர்தான் கவிதா. எனவே அவரிடம் பிரபு அன்பாக பழகினார். கவிதாவின் கணவர் கராத்தே மாஸ்டராக பணியாற்றுகிறார். உடல் எடையை குறைக்க கவிதாவிற்கு பிரபு பல்வேறு பயிற்சி அளித்துள்ளார். இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இவரிடம் பழகிய பிரபு அவரை ஆபாசமாக போட்டோ எடுத்துள்ளார். இதை காட்டி அவரை தொடர்ந்து துன்புறுத்தி வந்தார். இதை கவிதா தனது நண்பர்களான அமுல் திவாகர், கார்த்திக்கிடம் கூறி புலம்பியுள்ளார். பின்னர்தான் 3 பேரும் சேர்ந்து கொலை திட்டம் போட்டு செயல்படுத்தியுள்ளனர்.

சிசிடிவி மூலம் துப்பு துலங்கியது
துடியலூர் அருகே துண்டிக்கப்பட்ட கை கிடைத்ததும் விரல் ரேகை பதிவு எடுக்கப்பட்டது. அது கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சார்ந்த காணாமல் போன சுமார் 500 பேரின் ரேகைகளுடன் ஒப்பீடு செய்து பார்க்கப்பட்டது. பிரபுவின் கை ரேகை அவர் வீட்டில் இருந்த ஒரு வாட்டர் பாட்டிலில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த ரேகை வெட்டப்பட்ட கையில் இருந்த ரேகையுடன் ஒத்துப்போனது. இதைத்தொடர்ந்து அவர் வீட்டில் இருந்து பல்வேறு பகுதியில் உள்ள 250 சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அமுல் திவாகர், கார்த்திக் ஆகியோருடன் பிரபு பைக்கில் சென்ற காட்சி கிடைத்தது. இதை வைத்து அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தபோது உண்மை தெரியவந்தது. அமுல் திவாகர் தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை செய்கிறார்.

தலை, உடல், கைகளின் ஒரு பகுதி கிடைத்தது
உடல் பாகங்களை 12 துண்டுகளாக வெட்டி குற்றவாளிகள் பிளாஸ்டிக் கவரில் போட்டுள்ளனர். பின்னர் பைக்கில் வைத்து பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று வீசியுள்ளனர். இதுவரை தலை, உடல், கைகளின் ஒரு பகுதி கிடைத்துள்ளது. ஒரு கால் தொடை, இரண்டு கைகளின் மேல் பகுதி இன்னும் கிடைக்கவில்லை. இவற்றை பீளமேடு பகுதியில் போலீசார் தேடி வருகின்றனர். ஒரு வாரம் எப்படி கொலை செய்யலாம்? எங்கே தூக்கி வீசலாம்? என இவர்கள் திட்டமிட்டு இந்த கொலையை செய்துள்ளனர். தனித்தனியாக வீசிவிட்டால் போலீசார் பிடிக்க முடியாது என கருதியுள்ளனர்.  

கொலை செய்த பின்னர் தப்பி செல்லாமல், போலீசார் தேடுகிறார்களா? எப்படி விசாரிக்கிறார்கள்? என கண்காணித்து வந்தனர். அமுல் திவாகரின் செல்போன் எண்ணும், இறந்த பிரபுவின் செல்போனும் காந்திமாநகரில் ஒரே இடத்தில் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. இதை வைத்தே போலீசார் குற்றவாளிகளை நெருங்கினர். குற்றவாளிகளிடம் அரிவாள், கத்தி, பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.