சென்னை: சித்தூரில் காதல் மனைவியை கொலை செய்து நாடகமாடிய சென்னையை சேர்ந்த கணவரை 3 மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர். அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகர் 8வது தெருவை சேர்ந்தவர் மதன்(19). இவர் புழல் அடுத்த கதிர்வேடு ஜான்விக்டர் தெருவை சேர்ந்த மாணிக்கம்-பல்கிஸ் தம்பதி மகள் தமிழ்ச்செல்வி (19) என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் காதல் விவகாரம்  பெற்றோருக்கு தெரிந்ததும் இருவீட்டாரும் இணைந்து திருமணம் செய்து வைத்தனர்.

கடந்த ஜூன் 25ம்தேதி தமிழ்ச்செல்வியின் தாயார் வழக்கம் போல் போன் செய்தபோது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. கணவர் வீடு, நண்பர்களிடம் கேட்டபோதும் தமிழ்ச்செல்வி மற்றும் அவரது கணவர் மதன் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கடந்த 30ம் தேதி பெற்றோர் செங்குன்றம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். ஆரம்பத்தில் மதனிடம் செங்குன்றம் போலீசார் தொடர்ந்து விசாரித்தனர். இதில், தமிழ்ச்செல்வியை பற்றி எந்த தகவலையும் தெரிவிக்காமல் மாற்றி, மாற்றி பேசியுள்ளார். இது போலீசாருக்கு மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, கோனே அருவியில் மசாஜ் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், நாராயணவனம் பகுதியில் உள்ள பாறையில் ஒரு பெண்ணின் செருப்பு, சுடிதார் கிடப்பதாக தகவல் கொடுத்தனர். இதன் அடிப்படையில், நாராயணவனம் போலீசார் அங்கு சென்று தேடியபோது அங்குள்ள பாறை இடுக்கில் இளம்பெண் சடலம் கிடந்தது. ஆனால், அந்த சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அடையாளங்களை வைத்து சந்தேகத்தின்படி செங்குன்றம் போலீசார் சென்று பார்த்தபோது கொல்லப்பட்டவர் தமிழ்ச்செல்வி என்பது தெரிந்தது.

இந்நிலையில், போலீசார் மதனிடம் நடத்திய தொடர் விசாரணையில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கோனே அருவிக்கு மதனும் தமிழ்ச்செல்வியும் குளிக்க சென்றது தெரியவந்தது. தொடர்ந்து, அங்குள்ள கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது தமிழ்ச்செல்வியும் மதனும் ஒன்றாக பைக்கில் செல்வதும் 2 மணிநேரத்திற்கு பிறகு மதன் மட்டும் தனியாக வருவதும் பதிவானது. இதையடுத்து போலீசார் மதனை பிடித்து விசாரித்தனர். இதில், கோனே அருவியில் குளித்தபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது தமிழ்ச்செல்வியை கத்தியால் குத்திவிட்டு  அங்கிருந்து சென்று விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து, நாராயணவனம் போலீசார் மதனை நேற்று முன்தினம் கைது செய்து கொலைக்கு பயன்படுத்திய கீ செயின் உடன் கூடிய கத்தி பல்சர் பைக்கை பறிமுதல் செய்தனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *