பழநி: பழநி அரசு விடுதியில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 4 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி டவுன், சத்யா நகரில் ஆதிதிராவிடர் நலத்துறை மாணவிகள் விடுதி உள்ளது. இவ்விடுதியில் அரசு பள்ளிகளில் படிக்கும் கொடைக்கானல் மற்றும் பழநி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவ்விடுதியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற அதிகாரிகள் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தங்களை தொடர்பு கொள்ளலாமெனக் கூறி தொடர்பு எண்களை வழங்கிச் சென்றுள்ளனர்.

இந்த எண்களை விடுதியைச் சேர்ந்த சில மாணவிகள் தொடர்பு கொண்டு மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் விடுதியில் விசாரணை நடத்தினர். இதில் அப்பகுதியைச் சேர்ந்த சிலரால் 4 மாணவிகள் பாலியல் சீண்டலுக்கு ஆளானது தெரியவந்தது. இது தொடர்பாக பழநி அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கிருபாகரன் (23), பரமானந்தம் (24), ராகுல் (25) மற்றும் 17 வயது கல்லூரி மாணவர் என 4 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் பழநி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், அலட்சியமாக பணிபுரிந்ததாகக் கூறி விடுதி காப்பாளர் அமுதா, காவலாளி விஜயா ஆகியோர் சஸ்பெண்ட்  செய்யப்பட்டனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.