அம்பத்தூர்: சென்னை பாடி பாண்டுரங்கபுரம் சுடுகாடு அருகே போதைப் பொருள் விற்பனை செய்ய சில வாலிபர்கள் பதுங்கி இருப்பதாக கொரட்டூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், அந்த இடத்திற்கு விரைந்து சென்ற கொரட்டூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் அங்கு ரகசிய சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்த மூன்று வாலிபர்களை மடக்கி பிடித்த போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர், விசாரணையில், அவர்கள் பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த நசீர் பாஷா (33), பெரம்பூரை சேர்ந்த ஷேக் ரஹ்மான் (25) மற்றும் புதுப்பேட்டையை சேர்ந்த சையத் நவித் (25) என்பது தெரிய வந்தது. இவர்களிடமிருந்து 20 கிராம் எடை கொண்ட ஐஸ் என்று அழைக்கப்படும் ஒருவித போதைப்பொருளை கைப்பற்றினர். பிறகு மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அந்த போதைப் பொருள் ஒரு கிராமின் மதிப்பு 1000 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது, அவர்களிடமிருந்து ரூ.18,500 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.