கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைசாவடி பகுதியில் இன்று காலை போலீசாரின் வாகன சோதனையில், ஆந்திராவில் கடத்தி வந்த 8 கிலோ கஞ்சா, சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு கடத்தி செல்லப்பட்ட 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர். கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி செல்லும் வாகனங்களில் ஆரம்பாக்கம் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி வேகமாக சென்ற மினி வேனை மடக்க முயன்றனர். அந்த வேன் நிற்காமல் சென்றதால், அதை சுமார் 2 கிமீ தூரம் விரட்டி பிடித்து சோதனை செய்தனர்.

இச்சோதனையில் அந்த வேனில் 2 டன் எடையிலான ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தி செல்லப்படுவது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, வேனை ஓட்டி வந்த நபரை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (50) என்பதும், இவர் சென்னையில் ரேஷன் கடைகளில் அரிசியை குறைந்த விலைக்கு பெற்று, பாலீஷ் செய்து ஆந்திராவில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தட்சிணாமூர்த்தியை கைது செய்து பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர். மேலும், 2 டன் ரேஷன் அரிசி மற்றும் மினி வேனை பறிமுதல் செய்து, திருவள்ளூர் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, அதே எளாவூர் சோதனைசாவடி பகுதியில் இன்று காலை 7 மணியளவில் ஆந்திராவில் இருந்து வந்த வாகனங்களை சிப்காட் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஆந்திராவில் இருந்து வந்த அரசு பேருந்தை நிறுத்தி பயணிகளின் உடைமைகளை சோதித்தனர். இதில், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ருக்மன் (24) என்ற வாலிபரின் பையில் 8 கிலோ கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கஞ்சா கடத்தி வந்த ருக்மனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.