Loading

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு வந்திருந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மஹாலய அமாவாசையையொட்டி தனுஷ்கோடி கடலில் முன்னோர்களுக்கு திதி கொடுத்துவிட்டு, ராமநாதசாமி கோயிலில் உள்ள 22 புண்ணிய திருத்தங்களில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தார்.

ராமேஸ்வரம் கோயிலில் புனித நீராடிய அன்பில் மகேஸ் பொய்யாமொழி

முன்னதாக நேற்று ராமேஸ்வரம் சென்ற அவர் தங்கச்சிமடம் ஊராட்சியில் உள்ள மெய்யும்புளி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இல்லம் தேடிக் கல்வி மையத்தை பார்வையிட்டு மாணவர்களின் கல்வித் திறன் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் இரவு ஓய்வு எடுத்த அவர், காலை கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தபின்பு, தங்கும் விடுதிக்கு திரும்பியபோது வழியில் ராமேஸ்வரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்குள் சென்று திடீரென ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களின் அடிப்படை தேவைகள் குறித்து அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.

அன்பில் மகேஸ் பொய்யாமொழி கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்ததை செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களிடம் இதனை செய்தியாக்க வேண்டாம் என அமைச்சர் தரப்பிலிருந்து கேட்டுக்கொள்ளப்பட்டது.

பின்னர் தங்கும் விடுதியிலிருந்து திருச்சி புறப்பட தயாரான அமைச்சர், விடுதி வாசலில் நீண்ட நேரமாக காத்திருந்த சில செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், “தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ள இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை வெளிநாட்டைச் சேர்ந்த வல்லுநர்களே பாராட்டி வருகின்றனர். அந்த அளவிற்கு இந்தியாவில் ஒரு முன்மாதிரி திட்டமாக இது பார்க்கப்படுகிறது.

சாமி தரிசனம் செய்த அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு பிரசாதம் வழங்கப்பட்டது

ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர்களால் தங்கள் பிள்ளைகளை டியூஷனுக்கு அனுப்ப முடியாது. மாணவர்களின் கற்றல் திறன் தடைபடாமல் இருக்க இந்த இல்லம் தேடி கல்விதிட்டம் மிகப் பயனுள்ளதாக அவர்களுக்கு உள்ளது. ராமநாதபுரத்தில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை ஆய்வு செய்தேன், தன்னார்வலர்கள் ஆத்மார்த்தமான முறையில் மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்கின்றனர்.

தற்போது பரவி வரும் காய்ச்சல் மூன்று நாள்கள் மட்டும்தான் இருக்கும் என சுகாதாரத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த காய்ச்சலுக்காக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ‘இதற்காக விடுமுறை அளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை’ எந்தெந்த பகுதிகளில் இந்த காய்ச்சல் மூன்று நாள்களாக இருக்கின்றதோ அங்கு முகாம்கள் அமைத்து சிகிச்சை அளிக்கப்படும் என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையை பொறுத்தவரையில் முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சருடன் பேசி கொரோனா காலத்தை எதிர்கொண்டதை போன்று, இந்த காய்ச்சலையும் எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்தார்.

அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்

சமீபத்தில் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுப்பதாக தொடர்ந்து புகார்கள் வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “மாணவிகள் தங்கள் பிரச்னைகள் குறித்து தெரிவிக்க அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் புகார் அளிக்க தயங்கும் மாணவிகளுக்காக தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து தெரிவிக்கலாம். அதுபோன்ற புகார் எழும்பட்சத்தில் உடனடியாக அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுதான் பள்ளிக் கல்வித்துறையின் வேலை அதனை சிறப்பாக செய்து வருகிறோம்” என்றார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *