Loading

புதுடில்லி,’காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. காங்., மூத்த தலைவர் சசி தரூர் போட்டியிட, இடைக்கால தலைவர் சோனியா அனுமதி அளித்துள்ளார். இந்நிலையில், இத்தேர்தலில் போட்டியிடுவதற்கு, மூத்த தலைவர் அசோக் கெலாட், ராஜஸ்தான் முதல்வராகவும் தொடர்வது உட்பட பல நிபந்தனைகள் விதித்துள்ளார்.லோக்சபாவுக்கு 2014ல் நடந்த தேர்தலில் இருந்து, காங்கிரஸ் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. கடந்த 2019ல் நடந்த லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, தலைவர் பதவியில் இருந்து ராகுல் வெளியேறினார். இதையடுத்து, அவருடைய தாய் சோனியா, கட்சியின் இடைக்கால தலைவர் பொறுப்பை ஏற்றுள்ளார்.

நிராகரிப்பு

கட்சிக்கு நிரந்தர தலைவர் நியமிக்க வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, ‘ஜி – 23’ எனப்படும் 23 மூத்த அதிருப்தி தலைவர்கள் குழு வலியுறுத்தியது. ஆனால், கட்சியில் பெரிய மாற்றம் ஏற்படாததால், பல தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேறத் துவங்கினர்.இதற்கிடையே, ராகுல் மீண்டும் தலைமையேற்க வேண்டும் என, கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்; ஆனால், அவர் இதை நிராகரித்துள்ளார். இந்நிலையில், நீண்ட இழுபறிக்குப் பின், கட்சித் தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.வரும் அக்., 17ல் தேர்தல் நடக்க உள்ளது.

இதில் போட்டியிட, வரும் 24 முதல் 30ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தலைவர் பதவிக்கான தேர்தலில் ராகுல் போட்டியிடுவாரா என்ற கேள்வி தொடரும் நிலையில், மூத்த தலைவர் சசி தரூர், தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். சோனியாவை நேற்று முன்தினம் அவர் சந்தித்து பேசினார். அப்போது, இந்த தேர்தலில் தான் நடுநிலை வகிக்க உள்ளதாகவும், அதிகாரப்பூர்வமாக யாரையும் வேட்பாளராக நிறுத்தப் போவதில்லை என்றும் அவரிடம் சோனியா கூறியுள்ளார்.சசி தரூர் போட்டியிடுவதற்கு எந்த தடையும் இல்லை என்றும் சோனியா கூறியுள்ளார்.

அதிருப்தி குழுவைச் சேர்ந்த இவர் போட்டியிட உள்ள நிலையில், ராகுலுக்கு விசுவாசமானவரான ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை, தலைவர் பதவிக்கு நிறுத்துவது குறித்து பேசப்படுகிறது. ஆனால், ராகுலே தலைவர் பதவியை ஏற்க வேண்டும் என்று அசோக் கெலாட், 71, தொடர்ந்து கூறி வருகிறார்.இதற்கிடையே, ராகுல் போட்டியிடாத நிலையில், கெலாட்டை வேட்பாளராக நிறுத்த, ராகுல் ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக அவரிடம் பேசப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு கெலாட் பல நிபந்தனைகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.ராகுலை தலைவர் பதவி ஏற்கும்படி தொடர்ந்து வலியுறுத்தும்படி கெலாட் கூறியுள்ளார். வேறு வழியில்லாவிட்டால், போட்டியிட தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

ஆட்சி கவிழ்ப்பு

அதே நேரத்தில், ராஜஸ்தான் முதல்வர் பதவியை இழப்பதற்கு அவர் தயாராக இல்லை. கடந்த 2018ல் நடந்த சட்டசபை தேர்தலின்போது, இளம் தலைவரான சச்சின் பைலட் முதல்வராக்கப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால், மூத்த தலைவர் என்ற அடிப்படையில் கெலாட்டுக்கு வாய்ப்பு தரப்பட்டது. இதனால், கட்சியில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், கட்சியில் இருந்து வெளியேறுவதற்கு சச்சின் பைலட் தயாராக இருந்தார். இதைஅடுத்து, ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை கெலாட் சந்தித்தார்.இதனால், தான் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், முதல்வர் பதவியை சிறிது காலம் தொடர அவர் விருப்பம் தெரிவித்துள்ளார் அல்லது தன் ஆதரவாளர் ஒருவரை முதல்வர் பதவியில் அமர வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.இவை நடைபெறாத நிலையில், கட்சியின் தலைவராக சோனியா பதவியேற்க வேண்டும்; தான் செயல் தலைவராகவும்,ராஜஸ்தான் முதல்வராகவும் இருக்கத் தயாராக இருப்பதாக கெலாட் கூறியுள்ளதாக தெரிகிறது.இதற்கிடையே, சச்சின் பைலட் நேற்று முன்தினம் புதுடில்லியில் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார். தற்போது பாதயாத்திரை மேற்கொண்டுள்ள ராகுலையும் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார்.அசோக் கெலாட்டின் நிபந்தனைகளை கட்சி ஏற்குமா அல்லது ராஜஸ்தான் முதல்வர் பதவி சச்சின் பைலட்டுக்கு கிடைக்குமா என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும்.

சோனியாவுடன் சந்திப்பு

கேரளாவில் ராகுல் நடத்தி வரும் பாதயாத்திரையில் பங்கேற்றுள்ள கட்சியின் பொதுச் செயலர் வேணுகோபால் நேற்று திடீரென புதுடில்லி சென்று, சோனியாவை சந்தித்து பேசினார். கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் உள்ளிட்டவை குறித்து அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது.

தீர்மானங்கள் கட்டுப்படுத்தாது

கட்சியின் பொதுச் செயலரான ஜெய்ராம் ரமேஷ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:ராகுல் தலைமையேற்க வேண்டும் என்று, பல மாநிலங்களில் கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவை, கட்சியைக் கட்டுப்படுத்தாது.ஜனநாயக முறைப்படி 9,000 பிரதிநிதிகள், கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பர். சசி தரூர் போட்டியிடப் போவதாக கூறுகின்றனர். யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். ஆனால், ஒருமித்த ஆதரவு உள்ளவரே கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவது, கட்சிக்கு சிறந்ததாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *