மொகாலி: இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

209 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு ஓப்பனிங் அதிரடியாக அமைந்தது. ஆரோன் பின்ச் – கேமரூன் கிரீன் இணை மிரட்டலாக தொடங்கினர். பின்ச் வழக்கம்போல் பவர்பிளே ஓவருக்குள் தனது ஆட்டத்தை முடித்துக்கொள்ள கிரீன் இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்தார். அப்படி சொல்வதைவிட, இந்தியாவின் மோசமான பீல்டிங் அவருக்கான வாய்ப்பை அதிகரித்தது. இந்திய வீரர்கள் அடுத்தடுத்த அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை தவறவிட அதை சரியாக பயன்படுத்தி, அரைசதம் கடந்தார். அவருக்கு ஸ்மித் பக்கபலமாக அமைய, ஆஸ்திரேலியாவின் ரன் ரேட் ஓவருக்கு 10 என்பதை தாண்டிச் சென்றது.

இவர்கள் கூட்டணியை பிரிக்க முயன்ற நிலையில் அக்சர் படேல் அதை கச்சிதமாக செய்துமுடித்தார். 61 ரன்கள் எடுத்த கிரீனை அக்சர் வீழ்த்த, அடுத்த ஒரே ஓவரில் ஸ்மித்தையும், மேக்ஸ்வெல்லையும் வெளியேற்றினார். ஜோஷ் இங்கிலிஸை அக்சர் அவுட்டாக்க இந்தியாவின் பக்கம் ஆட்டம் திரும்பியது. ஆனால், அறிமுக வீரராக களமிறங்கிய டிம் டேவிட்டும், மேத்யூ வாடும் இணைந்து இந்தியாவுக்கு பயம்காட்டினர். குறிப்பாக மேத்யூ வாட் அதிரடியாக விளையாடினார். ஹர்ஷல் படேலின் ஓவரில் சிக்ஸர்களை விளாசி ஆட்டத்தை ஆஸ்திரேலியாவின் பக்கம் திருப்பினார். அவரின் 45 ரன்கள் உதவியுடன், 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது. இந்திய தரப்பில் அக்சர் 3 விக்கெட், உமேஷ் 2 விக்கெட், சஹால் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இந்தியா இன்னிங்ஸ்: டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதனால் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் இந்தியாவுக்காக ஆட்டத்தை தொடங்கினர். ரோகித், 11 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து வந்த கோலி 2 ரன்களில் வெளியேறினார். பின்னர் மூன்றாவது விக்கெட்டுக்கு இணைந்த ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவும் 68 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ராகுல் 55 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து களத்திற்கு பாண்டியா வந்தார். சூர்யகுமார் யாதவ், 46 ரன்கள் எடுத்து அவுட்டானார். அக்சர் படேல் மற்றும் தினேஷ் கார்த்திக் தலா 6 ரன்கள் எடுத்து வெளியேறினர்.

ஆஸ்திரேலிய அணி சார்பில் நாதன் எல்லிஸ் 3, ஹேசல்வுட் 2 மற்றும் கேமரூன் கிரீன் 1 விக்கெட்டும் கைப்பற்றி இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. ஹர்திக், 30 பந்துகளில் 71 ரன்கள் எடுத்திருந்தார். 7 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் இதில் அடங்கும். கடைசி ஓவரின் கடைசி 3 பந்துகளில் சிக்ஸர் விளாசினார் ஹர்திக். ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டி வருகிறது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.