நாக்பூர்: மஹாராஷ்டிரா சர்வதேச சேலஞ்ச் பாட்மின்டன் இரட்டையரில் இந்தியாவின் அர்ஜுன், துருவ் கபிலா ஜோடி தங்கம் வென்றது.
நாக்பூரில், இந்திய மஹாராஷ்டிரா சர்வதேச சேலஞ்ச் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் அர்ஜுன், துருவ் கபிலா ஜோடி, தாய்லாந்தின் சாலோம்பன் சரோஎன்கிடமோர்ன், நந்தகர்ன் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 21–17 எனக் கைப்பற்றிய அர்ஜுன், கபிலா ஜோடி, இரண்டாவது செட்டை 20–22 என போராடி இழந்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் எழுச்சி கண்ட இந்திய ஜோடி 21–18 என வென்றது.
ஒரு மணி நேரம், 18 நிமிடம் நீடித்த போட்டியில் அர்ஜுன், துருவ் கபிலா ஜோடி 21–17, 20–22, 21–18 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் மீராபா லுவாங் மைஸ்னம், மிதுன் மஞ்சுநாத் மோதினர். அபாரமாக ஆடிய மைஸ்னம் 21–14, 21–16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ருத்விகா ஷிவானி 11–21, 11–21 என ஜப்பானின் மிஹோ கயாமாவிடம் வீழ்ந்தார்.
கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் கவுஸ் ஷேக், மனீஷா ஜோடி 18–21, 9–21 என தாய்லாந்தின் ருத்தனாபக், ஜெனிச்சா சுஜய்பிரபாரத் ஜோடியிடம் தோல்வியடைந்தது.
Advertisement