சேலம் :சேலத்தில் டூவீலரை திருடிச் சென்ற இன்ஜினியரிங் பட்டதாரி வாலிபர், டூப்ளிகேட் சாவி போட வந்த போது சிக்கினார். அவரை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.சேலம் டவுன் கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஆசிக். இவர் கடந்த 18ம்தேதி, தனது டூவீலரில் சேலம் ஐந்து தியேட்டர் பகுதிக்கு சென்றார். அங்கு வண்டியை நிறுத்தியிருந்தார். திடீரென அவரது வண்டியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அளித்த புகாரின் பேரில், பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று, சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் திருவள்ளுவர் சிலை அருகில், டூவீலர்களுக்கு டூப்ளிகேட் சாவி போட்டுக்கொடுக்கும் இடத்திற்கு, ஆசிக்கின் டூவீலருடன் வந்த 2 பேர், டூப்ளிகேட் சாவி செய்து தரும்படி கேட்டனர். டூப்ளிகேட் சாவி தயார் செய்து கொடுப்பவர்கள், கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால், வண்டியை பார்த்ததும் அது ஆசிக்கின் திருடு போன வண்டி என்பதை அறிந்து கொண்டனர். பின்னர், அவருக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர்.

அதன் பேரில், அவர் உடனடியாக வந்து பார்த்தபோது, அது தனது வண்டி என்பதை தெரிந்து கொண்டார். இதைக் கண்டதும், டூவீலரை எடுத்து வந்த 2 பேரும், அங்கிருந்து தப்பியோட முயன்றனர். இதை கண்ட பொதுமக்கள், அவர்களை சுற்றி வளைத்தனர். ஆனால், ஒருவர் தப்பியோடிய நிலையில், ஒருவர் மட்டும் சிக்கி கொண்டார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும், டவுன் போலீசார் விரைந்து சென்று, பொதுமக்கள் பிடியில் இருந்த வாலிபரை மீட்டு விசாரித்தனர்.

இதில் அவரது பெயர் மோகன்ராஜ்(26) என்பதும், ஒமலூர் பக்கமுள்ள தேக்கம்பட்டி உப்போடை காளியம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர் என்பதும், பி.இ.பட்டதாரி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து பிடிபட்ட மோகன்ராஜை, பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.