சட்டவிரோத செயலுக்கு துணைப்போனதாக எழுந்த புகாரையடுத்து இரு காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சென்னை கே.கே நகர் காவல் நிலைய குற்றப்பிரிவில் பணிபுரிந்து வருபவர் கருப்பையா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வடபழனி, எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையங்களில் பணிபுரிந்து வந்த கருப்பையா மீது, ரவுடிகள் மற்றும் சமூகவிரோதிகளிடம் தொடர்பு வைத்துக்கொண்டு அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், குற்றவாளிகளுக்கு தகவல் கொடுத்து அவர்களை தப்பிக்க வைத்ததாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் இருந்தன.

இதையடுத்து அப்போதைய இணை கமிஷனர் மகேஸ்வரி, தலைமை காவலர் கருப்பையாவை, எண்ணூர் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்தார். ஆனால் தொடர்ந்து கே.கே. நகர் காவல் நிலையத்திற்கு திரும்பவும் வருவதற்கு முயற்சி செய்து, கடந்த 6 மாதத்துக்கு முன்பு கே.கே நகர் காவல் நிலையத்திற்கு வந்த தலைமை காவலர் கருப்பையா, பழைய பாணியை மீண்டும் தொடர்ந்து கொண்டு இருந்ததாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து ரவுடிகள் மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களிடம் தொடர்பு வைத்துக் கொண்டு பல்வேறு சட்டவிரோத செயலுக்கு துணைப்போனதாக தெற்கு போலீஸ் இணை கமிஷனர் நரேந்திரன் நாயருக்கு புகார்கள் வந்தநிலையில், காத்திருப்போர் பட்டியலுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

image

அதேபோல், சைதாப்பேட்டை காவல் நிலையம் மற்றும் குமரன் நகர் காவல் நிலையங்களில், உளவுப் பிரிவு காவலராக பணிபுரிந்து வந்த வேல்முருகன் மீதும் புகார் எழுந்தது. ரவுடிகள் மற்றும் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவோரிடம் தொடர்பு வைத்துக்கொண்டு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், கஞ்சா வியாபாரிகள் மற்றும் சட்ட விரோதம் மதுபான விற்பனையில் ஈடுபடுபவரிடம் தொடர்பு வைத்துக்கொண்டு தொடர்ந்து அவர்களிடம் லஞ்சம் பெற்று வந்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் வெளிநாடுகளில் இருந்து வந்து சென்னையில் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் நைஜீரியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு நபர்களுக்கு எந்த ஒரு ஆவணங்களும் இல்லாமல், பாஸ்போர்ட் குறித்த ஆவணங்களில் லஞ்சம் பெற்றுக் கொண்டு கையெழுத்து போட்டதாக குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்கள் தொடர்ந்து வந்த நிலையில், உளவுப்பிரிவு காவலர் வேல்முருகனும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.